• முகப்பு
  • பசுமைச் சுற்றுச்சூழல்
  • 8.5 நீரை சேமிப்போம்

8.5 நீரை சேமிப்போம்

உள்ளடக்கம்

ராகுல் பயிற்சிகளை தன் அக்காவிடம் செய்து காட்டியிருந்தான். ஆகவே ராகுலின் அக்கா “நீரை சேமிப்போம்” என்கிற அடுத்த பாடத்தை கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்.

அக்கா : “பஞ்ச பூதங்களில் முதன்மையானது நீராகும். ‘நீரின்றி அமையாது உலகு’ என்று வள்ளுவரும் நீரின் முக்கியத்துவத்தை ஒற்றை வரியில் நமக்கு உணர்த்தியிருக்கிறார்.”

ராகுல் : “அக்கா, உலகில் நிலப்பரப்பைக் காட்டிலும் நீர் பரப்பு தான் அதிகம் என்பார்களே. அப்படியானால் நாம் எதற்காக நீரை சேமிக்க வேண்டும்?”

அக்கா : “நாம் வாழும் பூமி மூன்றில் இரண்டு பங்கு நீரினாலும், மீதி ஒரு பங்கு நிலத்தாலும் சூழப்பட்டுள்ளது. இருந்தாலும், இந்த மூன்று பங்கு நீரும் நாம் பயன்படுத்த முடியாது என்பதே நிதர்சனம். அதிகரித்து வரும் மக்கள்தொகையால் நீரின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. ஆகவே, நீரின் சேமிப்பு மிக முக்கியமானதாகி விட்டது. நீரை எவ்வாறு சேமிப்பது மற்றும் நீரின் பயன்கள் குறித்து இப்பாடத்தில் கற்கலாம்.

நீரை சேமிக்கும் வழிமுறைகள் :

நீரை சேமிப்பதற்கு நாம் பெரிய நடவடிக்கைகளைத் தான் மேற்கொள்ள வேண்டும் என்பதில்லை. தினமும் பயன்படுத்தும் நீரை வீணாக்காது தேவைக்கேற்ப பயன்படுத்தினாலே ஒருநாளைக்கு குறிப்பிட்ட அளவு நீரை நம்மால் சேமிக்க முடியும். வீட்டில் எவ்வாறு இதனை செயற்படுத்துவது என்பது பற்றி பார்க்கலாம்.

  • காய்கறிகள், பாத்திரங்கள் கழுவிய நீரை மட்டும் வடிகட்டி சேமித்து தோட்டங்களுக்கு பயன்படுத்தலாம்.
  • குழாய் நீரை பயன்படுத்தாத நேரத்தில் திறந்து வைக்காதீர்கள்.
  • பாத்திரங்களை கழுவும் போதும், பல் துலக்கும் போதும் குழாயை மூடி விடுங்கள்.
  • நீர்ப்பாசன குழாய்களைப் பொருத்துதல்.
  • சலவை இயந்திரத்தை அதிகம் பயன்படுத்துவதை இயன்ற வரையில் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
  • ஷாம்பு மற்றும் சோப்பு போடுகையில் ஷவரை அணைத்து விடுவதோடு குறைந்தளவு நீரில் குளியுங்கள்.
  • ஷவர் அல்லது குழாயினை திறந்து வைப்பதனால் நீர் அதிகம் விரயமாக வாய்ப்பிருக்கிறது. வாளி பயன்படுத்தி குளிப்பதன் மூலமாக நீர் விரயமாவதைத் தடுக்கலாம்.
  • நீச்சல் குளங்களில் நீர் ஆவியவதைத் தடுக்க மூடி வையுங்கள்.
  • சுத்தம் செய்ய குழாய்களுக்கு பதில் துடைப்பம் பயன்படுத்துங்கள்.
  • ஒரு வினாடிக்கு ஒரு சொட்டு நீர் கசியுமானால் ஆண்டுக்கு சுமார் 10,200 லீட்டர் நீர் வீணாகிறது. சிறு துளி தான் பெருவெள்ளம் என்பதை நினைவில் கொண்டு குழாய்களில் நீர் கசிவுகள் இருந்தால் சரி செய்யவும்.
  • தொழில்நுட்ப குழாய்களைப் பயன்படுத்தல் – நுண் துகள்களால் அமைக்கப்பட்டுள்ள குழாய்களால் தண்ணீர் தூறலாகவே வெளிவரும். இதனால் ஒரு நிமிடத்திற்கு 12 லீட்டர் என்பது 600 மில்லி லீட்டர் அளவில் குறைவடைவதால், நாளொன்றுக்கு 35 லீட்டர் வரை நீரை சேமிக்கலாம். இது போன்று சென்சார் பொருத்திய குழாய்களும் பொருத்தலாம். நாம் கையை நீட்டும் போது மட்டும் நீர் வருவதால் நீர் வீணாவதைத் தடுக்கலாம்.

நீரை சேமிக்கும் தொழில்நுட்ப வழிமுறைகள் :

  • மழை நீர் சேகரிப்பு
  • குளங்கள் அல்லது ஏரிகள்
  • ஏரேட்டர் சேமிப்பு முறை
  • செலவிடும் நீரை அளவிடும் நீர் மீட்டர் கருவி

நீரைப் பாதுகாக்க இந்திய மாநிலங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் :

  • மகாராஷ்டிரா – வடிகால் கோடுகள் திருத்தப்பட்டுள்ளன.
  • தெலுங்கானா – தொட்டிகள் கட்டப்பட்டு கிராம மக்களின் வாழ்க்கை மாற்றப்பட்டுள்ளன.
  • ராஜஸ்தான் – மக்கள் பண்ணைகளில் சிறிய குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
  • தமிழகம் – நாகா நதியைப் புதுப்பிக்க நாகநதி சீரமைப்புத் திட்டம்”

ராகுல் : “ இந்தியாவில் நீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கான காரணங்கள் எவை?”

அக்கா : “இயற்கை மற்றும் மானிட செயல்பாடுகளாலே நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. நீர் பிரச்சினைகளுக்கான காரணங்களாவன :

  • வளங்களை சரியாக நிர்வகிக்காமை
  • அரசாங்கத்தின் கவனயின்மை
  • மானிட செயல்பாடுகளால் உருவாக்கப்பட்ட கழிவுகள்
  • நீர் வளங்களை அழித்து நகரமயமாக்குதல்

இவ்வாறான காரணங்களாலே குடிநீரைப் பெறுவதில் கூட இன்று சிக்கல் நிலவுகிறது. நம்முடைய நாள் ஒவ்வொன்றும் நீர் இன்றி அமைவது மிக சவாலானது. மனிதனால் உணவின்றி கூட வாழ முடியும். ஆனால் நீரின்றி மனிதனின் மற்றும் உயிரனங்களின் வாழ்வு சாத்தியமற்றது. குடிப்பதற்கு, குளிப்பதற்கு, சமைப்பதற்கு, தாவர வளர்ச்சிக்கு என ஒவ்வொன்றுக்கும் நீரின் தேவை தவிர்க்க முடியாதது. ஆகவே நீரை சேமிப்பதன் வாயிலாக நீர் வளத்தை பாதுகாப்போம்”

சுருக்கம்

நீரின்றி பூமியில் வாழ்வது கடினமானது என்பது அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. நீரின் பயன்கள், அதனை சேமிக்கும் வழிமுறைகளைப் பற்றி இப்பாடத்தில் கற்றுக் கொண்டிருப்பீர்கள். நீரை சேமித்து அருமையான நீர்வளத்தை காப்போம். பயனடைவோம்.

பயிற்சி

பின்வரும் வினாக்களுக்கு விடை தருக.
01) நீரின் முக்கியத்துவத்தைப் பற்றிய திருக்குறளை எழுதுக.
…………………………………………………………………………………………………………………………………………………………………..

02) பஞ்சபூதங்களில் முதன்மையானது எது?
……………………………………………………………………………………………………………………………………………………………………

03) நீரின் பயன்கள் மூன்றை எழுதுக.
1. ……………………………………………………………………………………………………………………………………………………………..
2. ……………………………………………………………………………………………………………………………………………………………..
3. ……………………………………………………………………………………………………………………………………………………………..

04) வீட்டில் நீரை சேமிக்கும் வழிமுறைகள் இரண்டைக் குறிப்பிடுக.
1. ……………………………………………………………………………………………………………………………………………………………..
2. ……………………………………………………………………………………………………………………………………………………………..

05) நீரை சேமிக்கும் தொழில் நுட்ப வழிமுறைகளில் ஒன்றையும், இந்திய மாநிலங்கள் மேற்கொண்ட நடவடிக்கை ஒன்றையும் குறிப்பிடுக.
1. ……………………………………………………………………………………………………………………………………………………………..
2. ……………………………………………………………………………………………………………………………………………………………..