• முகப்பு
  • பசுமைச் சுற்றுச்சூழல்
  • 8.4 காலநிலை மாற்றம்

8.4 காலநிலை மாற்றம்

உள்ளடக்கம்

ராகுல் “காலநிலை மாற்றம்” என்ற அடுத்தப் பாடத்தை சுயமாக கற்று முடித்திருந்தான். அப்போது அவனுடைய அக்கா அங்கு வந்தார்.

அக்கா : “ராகுல் என்ன செய்கிறாய்?”

ராகுல் : “அப்பா பரிசளித்த புத்தகத்தை சுயமாகக் கற்று பயிற்சிகளைச் செய்து கொண்டிருந்தேன் அக்கா. காலநிலை மாற்றம் என்கிற பாடத்தை படித்து விட்டேன். நீங்கள் இப்புத்தகத்திலிருந்து கேள்வி கேட்குறீர்களா? நான் பதில் சொல்கிறேன்”

அக்கா : “நல்லது ராகுல்! நிச்சயமாக நான் உங்களுக்கு உதவுகிறேன். புத்தகத்தை தாருங்கள்”

ராகுல் : “இதோ பெற்றுக் கொள்ளுங்கள் அக்கா”

அக்கா : “சரி முதலாவது கேள்வி என்னவென்றால், காலநிலை மாற்றம் என்றால் என்ன?”

ராகுல் : “குறிப்பிட்ட காலப்பகுதியில் புள்ளிவிபர ரீதியில் காலநிலை மூலக்கூறுகளின் அளவீடுகளில் ஏற்படும் மாற்றங்கள் காலநிலை மாற்றம் எனப்படும்.”

அக்கா : “ஆமாம். சரியான பதில்! இதனை இன்னும் தெளிவாக சொல்கிறேன். அதாவது காலநிலை கூறுகளான படிவுவீழ்ச்சி, வெப்பநிலை, காற்று முதலியவற்றில் உலக அல்லது நாடு ரீதியாக வழக்கத்திற்கு மாறாக ஏற்படுகின்ற மாற்றம் ‘காலநிலை மாற்றம்’ எனப்படுகின்றது.

சரி அடுத்த கேள்வி! காலநிலை மாற்றத்திற்கான இரண்டு முக்கிய காரணிகள் யாவை?”

ராகுல் : “இயற்கை காரணிகள் மற்றும் மானிட செயற்பாடுகள். அக்கா, ஆரம்ப காலங்களில் இயற்கை காரணிகள் தான் காலநிலை மாற்றத்தில் செல்வாக்கு செலுத்தின. ஆனால் இன்று நிலவும் காலநிலை மாற்றங்களுக்கு மானிட செயற்பாடுகளே பெரும் பங்கு வகிக்கின்றது எனப் படித்தேன்”

அக்கா : “ஆமாம் ராகுல் நீங்கள் படித்தது சரி தான். உலகின் காலநிலை மாற்றத்தில் சூரியக் கதிர்வீச்சின் தாக்கம், புவி சுற்றுவட்டப் பாதை மாற்றம், எரிமலை வெடிப்புகள், கடற்பரப்பு வேறுபாடுகள், கிரீன்ஹவுஸ் விளைவு முதலிய இயற்கை காரணிகளும் மற்றும் அளவுக்கதிகமான வளங்களின் நுகர்ச்சி, உயிர்ச் சுவட்டு எரிபொருட்களின் தகனம், காடுகள் அழித்தல், நெல் உற்பத்தி, மந்தை மேய்த்தல், விவசாயக் கழிவுகளை எரித்தல், திண்மக்கழிவுகள் போன்ற மனித செயற்பாடுகளும் செல்வாக்குச் செலுத்துகின்றன.

அடுத்த கேள்வி! காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகளை வரிசைப்படுத்துங்கள்.”

ராகுல் : “சரி அக்கா. விடை கூறுகிறேன்.

  • மழை வீழ்ச்சியில் மாற்றம் – புவி வெப்பமடைவதால் ஈர நிலங்கள் வறண்ட நிலங்களாகவும், அதே போன்று வறண்ட நிலங்கள் ஈர நிலங்களாகவும் மாற்றமடையலாம். உலக ரீதியாக 1970 களிலிருந்து வறட்சியினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அதிகரித்து வருகின்றன. மழை வீழ்ச்சி அடைந்துள்ளதே இதற்கு காரணமாகும்.
  • வெப்பநிலை உயர்வடைதல் – புவி வெப்பமடைதல் மூலம் ஏற்படுகின்ற முக்கியமான பாதிப்பு புவியின் வளிமண்டல வெப்பநிலை உயர்வடைதல்.
  • பனி உருகுதல் – வெப்பநிலை அதிகரிக்கும் போது பனிக்கட்டிகள் திண்ம நிலையிலிருந்து திரவ நிலைக்கு மாறும்.
  • கடல்மட்டம் உயர்வடைதல் – கடல்மட்ட உயர்வு காரணமாக இன்று கரையோர ஈரநிலங்கள் பல கடலுக்குள் மூழ்கி வருகின்றன.
  • உயிர் பன்முகத்தன்மை குறைவடைதல் – வெப்பநிலை தொடர்ச்சியாக அதிகரிக்கின்றபோது அதன் தீவிரத்தை தாங்கமுடியாத விலங்கினங்கள் உயிரிழக்கின்றன.
  • தொற்றுநோய்கள் பரவுதல் – வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் வறண்ட பிரதேசங்களில் ஏற்படுகின்ற வெள்ளப்பெருக்குகளால் தொற்றுநோய்கள் அதிகளவு ஏற்படுகின்றன. வெப்பநிலை அதிகரிக்கின்ற போது ஒட்டுண்ணிகள், வைரஸ், பாக்டீரியாக்கள் அதிகளவில் விருத்தியடைகிறது.
  • இயற்கை பேரழிவுகள் ஏற்படுதல் – வெப்பநிலை அதிகரிப்பதன் விளைவாக வறட்சி, சூறாவளி, வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை பேரழிவுகளின் உருவாக்கம் மிக அதிகளவில் காணப்படும்.
  • மனித உணர்வில் மாற்றம் ஏற்படுதல் – வெப்பநிலை அதிகரிப்பதனால் உடலியல் ரீதியாக அது பல்வேறு தாக்கங்களை மனிதர்களுக்கு ஏற்படுத்துகின்றது.
  • மீன்பிடித்தல் பாதிக்கப்படுதல்.
  • விவசாய நடவடிக்கைகள் பாதிப்படைதல்.
  • நீர்நிலைகள் வற்றுதல்.
  • வெப்பத்துடன் தொடர்புடைய இறப்பு வீத அபாய அதிகரிப்பு”

அக்கா : “மிக்க நன்று. ராகுல், நான் உங்களிடம் அடுத்த கேள்வியை கேட்கிறேன்.

காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளைக் கூறுங்கள்.”

ராகுல் : “காலநிலை மாற்றத்தில் முக்கியமாக பங்காற்றுவது காலநிலை மூலக்கூறான வெப்பநிலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு ஆகும். ஆகவே வெப்பநிலை அதிகரிப்பின் செல்வாக்கைக் கட்டுப்படுத்துகின்ற போது காலநிலை மாற்றத்தின் பெரிய விளைவுகளைத் தவிர்க்க முடியும்.

அந்த வகையில் காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளாக :

  • தாவரங்களை நடுதல்
  • ஆற்றல் சேமிப்பு கருவிகளைப் பயன்படுத்துதல்
  • உயிர் சுவட்டு எரிபொருட்களை பயன்படுத்துவதைத் தவிர்த்து மீள் புதுப்பிக்கக்கூடிய சக்திவள மூலாதாரங்களான சூரிய சக்தி, காற்று, கடல் அலை, நீர் முதலிவற்றை விருத்தி செய்து பயன்படுத்தல்.
  • மோட்டார் வாகனப் பயன்பாட்டைக் குறைத்தல்.
  • மறுசுழற்சி, மறுபயன்பாடு
  • விழிப்புணர்வூட்டல்

போன்ற செயல்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை தவிர்க்க முடியும். நான் சொல்வது சரி தானே அக்கா?”

அக்கா : “ஆமாம் மிகவும் சரி. இப்பொழுது இப்பாடத்தில் கொடுக்கப்பட்டுள்ள பயிற்சிகளை செய்து காட்டுங்கள். நான் அவற்றை திருத்தம் செய்து விட்டு அடுத்த பாடத்தை கற்றுத் தருகிறேன்.”

ராகுல் : “அக்கா! எனக்கு உதவுவதற்கு நன்றி! நான் இப்போதே செய்து காட்டுகிறேன்”

சுருக்கம்

காலநிலை மாற்றம் என்றால் என்ன என்பதையும் அதற்கான காரணிகளையும், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளையும், அவ்விளைவுகளை தவிர்ப்பதற்கான வழிமுறைகளையும் இப்பாடத்தின் வாயிலாக கற்பிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் என்பது மனித மற்றும் அனைத்து உயிரினங்களின் உயிர் வாழ்க்கைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதை அறிய முடிகிறது. எனவே காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

பயிற்சி

பின்வரும் வினாக்களுக்கு விடை தருக.
01) காலநிலை மாற்றம் என்றால் என்ன?
…………………………………………………………………………………………………………………………………………………………………..

02) காலநிலை மாற்றத்தில் செல்வாக்கு செலுத்தும் இரண்டு முக்கிய காரணிகள் எவை?
1. …………………………………………………………………………………………………………………………………………………………….
2. …………………………………………………………………………………………………………………………………………………………….

03) காலநிலை மாற்றத்தை ஏற்படுத்தும் இயற்கை காரணிகள் மூன்றினைக் குறிப்பிடுக.
1. …………………………………………………………………………………………………………………………………………………………….
2. …………………………………………………………………………………………………………………………………………………………….
3. …………………………………………………………………………………………………………………………………………………………….

04) காலநிலை மாற்றத்தை ஏற்படுத்தும் மானிட செயல்பாடுகள் மூன்றினைக் குறிப்பிடுக.
3. …………………………………………………………………………………………………………………………………………………………….
4. …………………………………………………………………………………………………………………………………………………………….
5. …………………………………………………………………………………………………………………………………………………………….

05) சக்திவள மூலாதாரங்கள் இரண்டை எழுதுக.
1. ………………………………………………………………… 2. ………………………………………………………………………

06) காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்காக நீங்கள் செய்யக்கூடிய நடவடிக்கைகள் இரண்டை எழுதுக.
1. …………………………………………………………………………………………………………………………………………………………….
2. …………………………………………………………………………………………………………………………………………………………….