• முகப்பு
  • நடத்தைகள்
  • 6.3 மூத்தோரை மதிப்போம்

6.3 மூத்தோரை மதிப்போம்

உள்ளடக்கம்

பாட்டி : “பசங்களா, பிறரைக் காயப்படுத்தக் கூடாது என்பதைப் பற்றி தாத்தா உங்களுக்கு சென்ற பாடத்தில் கற்பித்தார். இப்பொழுது மூத்தோரை மதிப்போம் என்பதனை இப்பாடத்தில் கற்கலாம்”

நவீன் : “சரி பாட்டி நாங்கள் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்கிறோம்”

மீனா : “ஆமா பாட்டி”

பாட்டி : “என் பேரப்பிள்ளைகளின் ஆர்வத்திற்கு பாராட்டுக்கள். சரி பாடத்திற்குள் நுழையலாம். மூத்தோர் என்பவர்கள் யார் என்று நவீன் சொல்லுங்கள்”

நவீன் : “நம்மை விட வயதில் பெரியவர்களை மூத்தோர் என்போம். அவர்களிடம் நிறைய அனுபவங்கள் இருக்கும். அவர்களிடமிருந்து பல நல்ல விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும்”

பாட்டி : “நவீனின் பதில் சரியானது. உங்களுக்கு தெரிந்த மூத்தோர்கள் ஐவரை மேகனா கூறுங்கள்”

மேகனா : “அம்மா, அப்பா, ஆசிரியர்கள், தாத்தா, பாட்டி”

பாட்டி : “சரியான பதில் மேகனா.”

மேகனா : “சரி பாட்டி. நன்றி!”

பாட்டி : “மூத்தோர்களை எவ்வாறு மதிக்க வேண்டும் என்பதைக் கூறுகிறேன் கவனமாகக் கேளுங்கள்.

  • உங்களிடம் உதவிகள் கேட்கும் போது மறுக்காமல் செய்து கொடுங்கள்.
  • பேருந்தில் பயணிக்கும் போது வயதானவர்கள், கர்ப்பிணித்தாய்மார்கள், ஊனமுற்றோர் போன்றவர்களைக் கண்டால் உங்களது இருக்கையை அவர்களுக்கு கொடுங்கள்.
  • அத்துடன் வங்கி, கடை, மருத்துவமனை போன்ற பொது இடங்களில் தங்களது தேவைகளுக்காக இவர்கள் காத்திருப்பதைக் கண்டால் உங்களால் இயன்றவரை முன்னுரிமை அளியுங்கள்.
  • அவர்களுடன் மரியாதையாக இன்முகத்துடன் பேசுங்கள்.
  • விருந்தினர்களாக நம் வீட்டுக்கு வருகை தரும் மூத்தோர்களை இன்முகத்துடன் வரவேற்று உபசரியுங்கள்.
  • மூத்தோர் சொல்வதைக் கேளுங்கள். நீங்கள் அவர்களால் நேசிக்கப்படுவீர்கள்.
  • அவர்களிடம் பணிவாக நடந்து கொள்ளுங்கள்.
  • அவர்களிடம் தீயதைக் கேட்டு அடம்பிடிக்காதீர்கள். ஏனென்றால் அவர்கள் நமது நலன் கருதியே சொல்கிறார்கள்.
  • பெற்றோர்களின் வருமானத்திற்கு மீறி பொருட்களை வாங்கித் தர சொல்லி கேட்காதீர்கள். பல சிறுவர்களுக்கு ஒருவேளை உணவு கூட கிடைப்பதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
  • மூத்தோர் மனம் புண்புடும் வார்த்தைகளைப் பிரயோகிக்காதீர்கள்.
  • உங்கள் வீட்டிலுள்ள மூத்தோர்களுடன் பேசுவதற்கு நேரம் ஒதுக்குங்கள்.
  • உங்களுக்கு தெரியாதவற்றை அவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.
  • மூத்தோருக்கு இரக்கம் காட்டுங்கள்.

இவற்றை பின்பற்றி மூத்தோரை மதித்து நடப்போம். இதன் மூலம் அவர்களது அன்பையும் நற்பிரார்த்தனைகளையும் பெறலாம்.”

நவீன், மேகனா, மீனா : “பாட்டி, நிச்சயமாக நாங்கள் மூத்தோரை மதிப்போம்”

சுருக்கம்

நம்மை விட வயதில் மூத்தோர்களை மதிப்பது நமது கடமையாகும். அவர்களை எவ்வாறு மதிக்கலாம் என்பது பற்றி இப்பாடத்தில் கூறப்பட்டுள்ளது. ஆகவே அதனைப் பின்பற்றி அவர்களின் அன்பைப் பெறுவோம்!

பயிற்சி

பின்வரும் வினாக்களுக்கு விடை தருக.
01) இப்பாடத்தில் நீங்கள் கற்றுக் கொண்ட நன்நடத்தை யாது?
………………………………………………………………………………………………………………………………………………………

02) மூத்தோர் என்றால் யார் என்பதை வரையறுங்கள்.
……………………………………………………………………………………………………………………………………………………….

03) உங்களுக்குத் தெரிந்த மூத்தோர் மூவரைக் குறிப்பிடுக.
………………………………………………. , ………………………………………………. , ……………………………………………..

04) மூத்தோரை மதிக்க நாம் செய்ய வேண்டிய விஷயங்களில் மூன்றை எழுதுக.
I. …………………………………………………………………………………………………………………………………….
II. …………………………………………………………………………………………………………………………………….
III. …………………………………………………………………………………………………………………………………….

05) மூத்தோரை மதிப்பதால் ஏற்படும் நன்மை ஒன்றை எழுதுக.
…………………………………………………………………………………………………………………………………………………………