• முகப்பு
  • சமூகப் பங்களிப்பு
  • 5.1 சிறந்ததோர் சமூகத்தைக் கட்டியெழுப்பப் பங்களிப்போம்

5.1 சிறந்ததோர் சமூகத்தைக் கட்டியெழுப்பப் பங்களிப்போம்

உள்ளடக்கம்

மாலை நேரம். கண்ணனின் அப்பா வேலை முடித்து இன்னும் வீட்டுக்கு வந்திருக்கவில்லை. அதனால், கண்ணன் மற்றும் யாழினி அவர்களின் அம்மாவின் அருகில் அமர்ந்திருந்தார்கள்.

அம்மா : “சிறந்த சமூகம் என்பது ஒவ்வொரு தனிமனிதனின் பங்களிப்பால் உருவாகக் கூடியது. எவ்வாறு நாம் இந்த சமூகத்திற்கு பங்களிக்க முடியும் என்பதை இன்று உங்களுக்கு கற்றுத் தருகிறேன். கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள்”

கண்ணன், யாழினி : “சரி அம்மா!”

அம்மா : “உலகம் உள்ளங்கையில் என்ற அளவிற்கு இணைய வளர்ச்சியால் உலகம் சுருங்கி விட்டது என்றாலும், சமூகத்தின் மீதுள்ள அக்கறை மனிதர்களுக்கு குறைந்துள்ளது. பெரியக் கட்டிடங்களைக் கட்டி இலாபம் ஈட்டுவதற்காக மரங்கள் வெட்டப்படுகின்றன. காடு அழிப்புகள் நடைபெறுகிறது. இது போன்ற இன்னும் எத்தனையோ அநியாயங்களை நாம் சுற்றுச்சூழலுக்கும் சமூகத்திற்கும் செய்து கொண்டிருக்கிறோம். இவ்வாறு நாம் செய்யும் அட்டூழியங்களும் அவற்றால் விளையும் பாதிப்புக்களும் பின்வருமாறு :

  • காடுகளை அழிப்பதால் சுற்றுச்சூழலின் வெப்பம் அதிகரித்து, வறட்சி என்பன ஏற்படுகிறது.
  • துரித உணவுகளாலும், மருந்திடப்பட்ட காய்கறிகளாலும் ஆரோக்கியம் பாதிப்படைகிறது.
  • பொது உடைமைகளை நாசம் செய்வதால் பிறருக்கு பயன்படுத்த முடியாத நிலை உருவாகிறது.
  • சமூக வலைத்தளங்களுக்கு அடிமை ஆவதால் உறவுகளுடன் நேரம் கழிப்பது குறைந்து, பெரியோருக்கு உதவி செய்யாதிருத்தல் ஏற்படுகிறது.
  • நகைச்சுவை என்ற பெயரில் பிறரின் உடல் ரீதியான குறைகளை சுட்டிக்காட்டி அவர்களது மனதை புண்படுத்துதல்.
  • தீய நட்புக்களின் அறிமுகம் கிடைப்பதால் தீய பழக்கங்களிற்கு அடிமையாகி தங்கள் அன்பானவர்களுக்கு கூட இரத்த தானம் வழங்க முடியாத சூழல் உருவாகுதல்.

நம் மத்தியில் பல தீய பழக்கங்கள் ஊடுருவியிருப்பதை இதன் வாயிலாக அறியலாம். ஆகவே இவற்றை தடுத்து பிறருக்கு எடுத்துக்காட்டாக இருப்பதோடு நம் நண்பர்களையும் நல்ல செயல்கள் செய்வதற்கு நாம் தூண்டுதலாக இருக்க வேண்டும்.”

கண்ணன் : “அம்மா இந்த தீயப் பழக்கங்களால் ஏற்படும் விளைவுகளை தவிர்க்க சிறந்ததோர் சமூகத்திற்கு எவ்வாறு நாம் பங்களிப்பு செய்யலாம்?”

அம்மா : “அருமையான கேள்வி. இப்படி தான் புத்திசாலித்தனமாக கேள்விகள் கேட்க வேண்டும். சிறந்ததோர் சமூகத்தின் பங்களார்களாய் நாம் செய்ய வேண்டியவை பின்வருமாறு :

  • மரம் நடுதல் :-

நம்முடைய ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் நம் நண்பர்களுக்கு இனிப்புக்கள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது போன்று மரக்கன்று ஒன்றை நட்டு சமூகத்திற்கு பங்களிப்பு செய்வோம். அத்துடன் வீடுகளில் இடவசதிக்கேற்ப சிறிய காய்கறித் தோட்டத்தை உருவாக்குவதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை நிலை உருவாகும்.

  • பொதுச் சொத்துக்களைப் பாதுகாத்தல் :-

பொதுச் சொத்துக்களை நம்முடைய சொத்துக்களைப் போல் பாதுகாக்க வேண்டும். பொது இடங்களின் சுவர்கள் மற்றும் மரச்சாமான்களில் எழுதுதல், உடைத்தல், திருடுதல், பொது இடங்களில் குப்பைகளை இடுதல், மரங்களை வெட்டுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

  • இரத்த தானம் வழங்குதல் :-

விபத்துக்களினால், நோய்களினால் உடலில் இரத்தம் குறைவடைந்து இரத்தம் தேவைப்படும் நிலை நம்மில் பலருக்குண்டு. இதற்காக சில தொண்டு நிறுவனங்கள் செயற்படுகின்றன. இரத்த தானம் அளிக்கக்கூடிய தேதியை அவர்கள் அறிவிப்பார்கள். அந்த நேரங்களில் நாமும் நம்முடைய இரத்தத்தை தானமாக வழங்கி ஒரு உயிரைக் காப்பாற்ற உதவலாம். ஆனால் அதற்கு நாம் ஆரோக்கியமானவர்களாகவும், போதைப்பொருள் பயன்படுத்தாதவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

  • பெரியோர்களுக்கு உதவுதல் :-

உங்களை விட வயதில் மூத்தவர்களுக்கு உங்களுடைய உதவி தேவைப்படும் போது மறுக்காமல் உதவி செய்யுங்கள். உங்களது நல் வாழ்க்கைக்காக அவர்களும் உதவி செய்திருக்கிறார்கள் என்பதை மறக்க வேண்டாம்.

உதாரணமாக : ஆசிரியர்கள், பெற்றோர்கள், தாத்தா, பாட்டி.

  • பார்வையற்ற மற்றும் ஊனமுற்ற சிறார்களுக்கு உதவுதல் :-

பார்வையற்றவர்கள் பாதை மாற அல்லது எழுதுவதற்கு சிரமப்படும் போது நீங்கள் அவர்களுக்கு உதவுங்கள். பார்வையற்றவர்களுக்கு மட்டுமல்லாமல் ஊனமுற்ற பெரியவர்கள் மற்றும் சிறார்களுக்கு உங்களால் முடிந்தால் கண்டிப்பாக உதவி செய்யுங்கள். எல்லா மனிதர்களுக்கும் குறைகள் உண்டு. ஆகவே, அவர்களை கேலி செய்யாதீர்கள்.

மேற்குறிப்பிட்டவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் சிறந்ததோர் சமூகம் கட்டியெழுப்பலாம்”

யாழினி : “நீங்கள் கூறியவற்றை கடைப்பிடித்து சிறந்த சமூகம் உருவாக்குவதற்கு பங்காளர்களாக நானும் அண்ணாவும் மாறுவோம் அம்மா”

அம்மா : “நல்ல பிள்ளைகள். இப்பொழுது நான் உங்களுக்கு பயிற்சி தருகிறேன் செய்து காட்டுங்கள்”

சுருக்கம்

சிறந்த சமூகம் என்பது தனிமனித பங்களிப்பின் விளைவாகும். சிறார்களாகிய நீங்களும் நல்லதோர் சமூகத்தை கட்டியெழுப்ப உதவ முடியும் என்பதை இப்பாடத்தின் மூலம் அறிந்திருப்பீர்கள். அத்துடன் சுற்றுச்சூழலுக்கும் சமூகத்திற்கும் நாம் செய்யும் அட்டூழியங்களையும் அதன் விளைவுகளையும் தெரிந்து கொண்டிருப்பீர்கள். ஆகவே இப்பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி ஆரோக்கியமான சமூகத்திற்கு பங்களிப்போம்.

பயிற்சி

பின்வரும் வினாக்களுக்கு விடை தருக.
01) சமூகத்திற்கு நாம் செய்யும் அநியாயங்கள் இரண்டைக் குறிப்பிடுக.
I. …………………………………………………………………………………………………………………………………………..
II. …………………………………………………………………………………………………………………………………………..

02) சுற்றுச்சூழலுக்கும் சமூகத்திற்கும் நாம் செய்யும் அநியாயத்தினால் ஏற்படும் விளைவுகள் மூன்றைக் குறிப்பிடுக.
I. ………………………………………………………………………………………………………………………………………
II. ………………………………………………………………………………………………………………………………………
III. ………………………………………………………………………………………………………………………………………

03) ஆரோக்கியமான அல்லது சிறந்ததோர் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான வழிமுறைகள் ஐந்தினை எழுதுக. (விளக்கத்தை எழுத வேண்டிய அவசியமில்லை)
I. ……………………………………………………………………………………………………………………………………….
II. ……………………………………………………………………………………………………………………………………….
III. ……………………………………………………………………………………………………………………………………….
IV. ……………………………………………………………………………………………………………………………………….
V. ……………………………………………………………………………………………………………………………………….