உள்ளடக்கம்
இந்த பாடம் பெற்றோர்களுக்கானது. உங்கள் குழந்தைகளிடம் நம்பிக்கை, தன்னம்பிக்கை மற்றும் வளைந்து கொடுக்கும் தன்மை போன்றவற்றை வளர்க்க உதவும் துணை தலைப்புக்களுடன் எளிய நடையில் கொடுக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கை :
உங்கள் குழந்தைகளுக்கு பெற்றோர்களாகிய நீங்கள், நம்பிக்கை பற்றி கற்றுக் கொடுப்பதால் அவர்கள் எதிர்காலத்தில் தோல்விகளைக் கண்டு துவளாமல் முயற்சியுடனும் நம்பிக்கையுடனும் திகழ்வார்கள். எவ்வாறு நீங்கள் இதனைக் கற்பிக்கலாம் என்பதற்கான வழிகாட்டல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- நீங்கள் தோல்விகளின் போது உடைந்து விடாதீர்கள். முடியும் என்று முயற்சித்துக் காட்டுவதன் மூலம் அவர்களுக்கு முன் உதாரணமாக திகழுங்கள்.
- உங்கள் பணிகளில் தவறுகள் நடக்கலாம். அதையே எண்ணி வருந்தாதீர்கள். யானைக்கும் அடி சறுக்கும் என்பதை நினைவில் கொண்டு கடந்து செல்ல உங்கள் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுங்கள்,
- குழந்தைகள் புதிய விஷயங்களைச் செய்யும் போது அவர்களைப் பாராட்டி உற்சாகப்படுத்துங்கள்.
- குழந்தைகள் தோல்விகளை சந்தித்தால் திட்டாதீர்கள். தவறுகளை இனங்கண்டு மீண்டும் முயற்சிக்க கற்றுக் கொடுங்கள்.
- அவர்களுக்குள் மறைந்திருக்கும் திறன்களை வெளிக்கொணர உதவி செய்யுங்கள்.
- இலக்குகளை நிர்ணயிக்க கற்றுக் கொடுங்கள். இலக்குகள் என்பது சிறிதாக கூட இருக்கலாம். அதனைப் பொறுத்து அதற்கு காலம் தேவைப்படலாம். தாமதமானாலும் இலக்குகளை அடையக் கற்றுக் கொடுங்கள். ஆமை மெதுவாக நகர்ந்து தன் இலக்கைத் தொட்டது என்பதை நினைவு கூறுங்கள்.
- இலக்குகளை நோக்கி பயணிக்கும் போது இடையில் விலகிக் கொள்ள அனுமதிக்காதீர்கள்.
- அவர்களுடைய உழைப்பை, திறன்களை பாராட்டுங்கள். இது அவர்களை உற்சாகப்படுத்தி மென்மேலும் முன்னேறத் தூண்டும்.
- வீட்டுவேலைகள், கல்வி, விளையாட்டு என எல்லாவற்றையும் சிறிது சிறிதாக கற்றுக் கொடுங்கள்.
- வெற்றி, தோல்வி, பசி, சந்தோஷம், கவலை என்பன எல்லோருக்குமானது என்பதை கற்றுக் கொடுங்கள்.
- சவால்களுக்கு முகங்கொடுக்க கற்றுக்கொடுங்கள்.
- உங்களுடைய அன்பை சொல்லிலும் செயலிலும் காட்டுங்கள். எப்பொழுதும் அவர்களுடன் நீங்கள் இருப்பதை நினைவுப்படுத்துங்கள்.
தன்னம்பிக்கை :
நம்பிக்கை என்பது பிறர் மூலம் வருவது. தன்னம்பிக்கை என்பது ஒருவர் தன் மீது கொண்ட நம்பிக்கை. குழந்தைகளுக்கு அவர்கள் மீதான தன்னம்பிக்கையை எவ்வாறு உங்களால் கட்டியெழுப்ப முடியும் என்பதை இனி பார்க்கலாம்.
- உங்கள் குழந்தைகளுக்கான முடிவை அவர்களிடமே விட்டு விடுங்கள். அதிலிருக்கும் சாதகப் பாதகங்களை சிந்தித்து சாவல்களை எதிர்நோக்கும் மனப்பான்மையை இதனால் மேம்படும்.
- அன்பு மற்றும் பாதுகாப்பு உடைய சூழலில் வளரும் குழந்தைகளிடம் தன்னம்பிக்கை இருக்கும். அவ்வாறான சூழலை உருவாக்குங்கள்.
- நீங்கள் தான் சிறந்தவர் என்று சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். அது அகங்காரத்தை வளர்த்து விடும். தோல்விகளை சுலபமாக ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை ஏற்படாது. ஆகவே, வெற்றி பெற்றாலும் முயற்சிப்பதை நிறுத்த வேண்டாம் என்பதை கற்றுக் கொடுங்கள். வெற்றியாளர்கள் தோல்விகளை சந்தித்துள்ளனர் என்ற உண்மையை புரிய வையுங்கள்.
- வாய்ப்புக்களை பயன்படுத்த சொல்லிக் கொடுங்கள். அது சிறந்த அனுபவத்தை தரும்.
- வீட்டு வேலைகளில் உதவ கற்றுக் கொடுங்கள். உதாரணமாக : படுக்கையறையை சுத்தம் செய்தல், சமைக்க உதவுதல் மற்றும் விருந்தினர்களை உபசரித்தல்.
- அவர்களுக்கு பிடித்த சாவால்களை செய்ய அனுமதியுங்கள். தோற்பதிலிருந்து அவர்கள் கற்றுக்கொள்வார்கள். உதாரணமாக : நீச்சல்
- தோல்விகளும், சிரமங்களும் ஒரு போதும் அவமானப்படும் விஷயமல்ல, தோல்விகளின் மூலமே எதிர் நீச்சலடிக்க முடியும்.
- தோல்விகளின் போது அவர்களுடன் நீங்கள் இருப்பதாலும் வழிகாட்டுவதாலும் குழந்தைகள் மீதான உங்கள் அன்பு எல்லையற்றது என்பதை அவர்கள் தெளிவாக உணர்வார்கள்.
- பயிற்சிகளை தொடர்ந்து செய்ய அனுமதியுங்கள். அடிக்க அடிக்க தான் அம்மியும் நகரும்.
- வெற்றியின் போதும் தோல்வியின் போதும் வேறு குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள். ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானவர்கள்.
வளைந்து கொடுக்கும் தன்மை :
வளைந்து கொடுக்கும் தன்மை என்பது எந்த சூழலிலும் வளைந்து கொடுக்கக் கூடிய ஒரு குணமாகும். குழந்தைகள் வேறுபட்ட சூழலை சந்திக்கிறார்கள். இதன் போது ஏற்படும் சவால்கள், மன அழுத்தங்கள், தடைகள் அவர்களை நிலைக்குலைய வைக்கின்றன. இவற்றை தடுக்க வேண்டுமென்றால் குழந்தைகள் வளைந்து கொடுக்கும் தன்மை உடையவர்களாக இருக்க வேண்டும். வளைந்து கொடுக்கும் தன்மையுடைய குழந்தைகள் புத்திசாலிகளாகவும், துணிச்சலுள்ளவர்களாகவும், ஆர்வமுள்ளவர்களாகவும், அதிக திறனுடையவர்களாகவும் விளங்குவார்கள். வளைந்து கொடுக்கும் தன்மை எல்லா குழந்தைகளிடமும் வளர்க்க முடியுமான ஒன்றாகும். ஆகவே இதனை எவ்வாறு குழந்தைகளுக்குள் வளர்ப்பது என்பது பற்றிப் பார்க்கலாம்.
- குழந்தைகளிடம் அன்பாகவும் அக்கறையாகவும் இருப்பதன் காரணமாக அவர்கள் நம்மை நம்புவார்கள். இதனால் எந்தவொரு சூழலையும் சமாளிக்கும் திறனை அவர்கள் வளர்த்துக் கொள்கிறார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
- அவர்கள் மீது அக்கறைக் கொண்டவர்களைப் பற்றி பேசுங்கள். இதன் மூலம் குழந்தைகளுக்குள் நேர்மறை எண்ணங்கள் உருவாகிறது.
உதாரணமாக : நீங்கள் போட்டியில் வென்றதை அப்பாவிடம் சொன்னேன். அவர் உங்களுக்கு பரிசு வாங்கி வருவதாகக் கூறினார்கள்.
- உதவி கேட்பதில் தவறில்லை என்பதை புரிய வையுங்கள். இதன் மூலம் நான் சிறந்தவர் தோல்வியே வராது என்கிற எண்ணங்கள் மாறுபட்டு பிரச்சினைகள் வரும் என்பதையும் அதனை எவ்வாறு சமாளிக்க முடியும் என்பதையும் கற்றுக் கொள்வதால் வளைந்து கொடுக்கும் தன்மை வளர்கிறது.
- இலக்குளை நிர்ணயிக்கவும். இதன் போது ஏற்படும் சவால்கள், தடைகள் போன்றவற்றைக் கற்றுக்கொடுங்கள். இதன் மூலம் அவ்வாறான சூழலில் எவ்வாறு சமாளிக்க முடியும் என்பதை சிந்தித்து அதற்கு தயாராகுவதன் மூலம் தோல்விகளையும் தடைகளையும் சுலபமாக ஏற்றுக் கொள்வார்கள்.
- விளையாட்டுகளில் ஈடுபடுத்தி தோற்பதற்கு அனுமதியுங்கள்.
- அவர்கள் சுயமாக செயல்பட ஊக்கப்படுத்துங்கள்.
- அவர்களது செயல்பாடுகளை சிறப்பு என்று சொல்லி நிறுத்தி விடாதீர்கள். இன்னும் பயிலவும், முயற்சிக்கவும் அனுமதியுங்கள்.
- குறித்த நேரத்தில் வேலைகளை முடிக்க பணியுங்கள்.
- நுணுக்குமான விளையாட்டுக்களை கற்றுக்கொள்ள அனுமதியுங்கள்.
- தினசரி உடற்பயிற்சியில் ஈடுபடுத்துங்கள்.
- வேறுபட்ட சூழலில் வசிக்கக் கூடியவர்களை மற்றும் திறமையானவர்களை அறிமுகப்படுத்துங்கள்.
- பிறர் உணர்வுகளை மதிக்கும்படி கற்றுக் கொடுங்கள்.
- ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பேணக் கற்றுக்கொடுங்கள்.
- பயத்தை கலைந்து முன்னேற நீங்கள் உதவுங்கள்.
- உங்களின் இலட்சியங்களை அவர்களை மீது திணிக்காதீர்கள்.
- குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்குங்கள். அவர்கள் பேச்சுக்கு செவி சாயுங்கள்.
சுருக்கம்
வாழ்க்கையில் வெற்றி என்பது சிறுவர்கள் முதியவர்கள் என்று பார்ப்பதில்லை. வெற்றி – தோல்வி என்பது இரவு பகலை போல் மாறி மாறி வரக்கூடியது. உங்கள் குழ்ந்தைகள் தோற்றால் கற்றுக்கொள்வார்கள். அதனால் அவர்களைத் திட்டாதீர்கள். அது அவர்களுக்கு மன உளைச்சலைக் கொடுக்கும். தீய வழியில் செல்ல வழிவகுக்கும். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கைகளிலே! தவறுகளை சுட்டிக்காட்டி நிறைகளைத் தட்டிக் கொடுத்து முயற்சிக்கவும், தோற்கவும், பயிலவும் உங்கள் பிள்ளைகளை அனுமதியுங்கள். இதனால் எதிர்காலத்தில் நம்பிக்கையுடன் எந்த சூழலையும் எளிதாக சமாளிக்கக்கூடிய தன்னம்பிக்கையுடைய தலைவராக உங்கள் பிள்ளை திகழும் என்பதில் ஐயமில்லை.