• முகப்பு
  • தலைமைத்துவப் பண்புகள்
  • 1.3 தோல்விகளைக் கண்டு துவளாதே!

1.3 தோல்விகளைக் கண்டு துவளாதே!

உள்ளடக்கம்

அப்பா : “தலைமைத்துவ பண்புகளில் ஒன்றான வெற்றித் தோல்விகளை சமமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை பற்றி அடுத்துப் பார்ப்போம்’’

கண்ணன் : “சரி அப்பா. நீங்கள் ஆரம்பியுங்கள். கற்றுக்கொள்ள நான் ஆர்வமாக இருக்கிறேன்’’

அப்பா : “கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவதும் தலைமைத்துவத்திற்கான பண்பு தான். அந்த பண்பு என் கண்ணாவிடம் இருக்கிறது. வாழ்த்துக்கள் கண்ணா’’

கண்ணன் : “நன்றி அப்பா’’

அப்பா : “நம் வாழ்க்கையில் எல்லா கட்டங்களிலும் வெற்றி பெறுவோம் என்று கூற முடியாது. தோல்விகள் துரத்தும் ஆனால் முயற்சியைக் கைவிடக்கூடாது. இதற்கு இந்த உலகம் கண்ட எத்தனையோ தலைவர்களின் வரலாறு சாட்சி. தாமஸ் ஆல்வா எடிசன், மின் விளக்கை கண்டுபிடிப்பதில் 900 முறைகளுக்கும் மேல் தோல்வியை தழுவினார். அந்த தோல்வி மூலம் அவர் எடுத்துக் கொண்ட பாடங்கள் இந்நாள் வரை இருளைப்போக்கும் ஒன்றான மின் விளக்கு உருவானது. சற்று சிந்தித்துப் பாருங்கள். அவருடைய தோல்விகளைக் கண்டு இது சரியாக வராது என்று எடிசன் விலகியிருந்தால் இன்றைய நம் வீடுகளில் மின் விளக்கு ஒளிர்வதென்பது கேள்விக்குறி தான்!

அடுத்த எடுத்துக்காட்டாக, சீனாவின் பணக்கார்களில் ஒருவரான ஜேக் மாவைக் குறிப்பிடலாம். அலிபாபா என்கிற இணையத்தள உலகளாவிய வியாபார நிறுவனத்தை நிறுவுவதற்கான அவரது கனவை நனவாக்க அவருக்கு பணம் தேவைப்பட்டது. அவர் பெரிய நிறுவனங்களின் முதலாளிகளைப் போய் சந்தித்து தன்னுடைய இணையத்தள வியாபாரத்தைப் பற்றி பேசினார். ஆனால் நிராகரிக்கப்பட்டார். முதலீடுகளைப் பெறுவதற்கான அவரது முயற்சி தோல்வியை சந்தித்துக் கொண்டே இருந்தது. இவன் சொல்லுவது நடப்பதற்கான சாத்தியமே இல்லை. முட்டாள்தனமான கற்பனை என்றார்கள். ஆனால் இதனை செயல்படுத்துவதன் மூலம் ஏதோ ஒரு மாற்றம் நிகழும் என்று அவருக்கு நம்பிக்கை இருந்தது. அதனால் முயற்சியைக் கைவிடாது தொடர்ந்ததால் அவருக்கு முதலீடுகள் கிடைத்தன என்றாலும் அவருக்கு சில வருடங்கள் கடந்த பின்னும் இலாபம் கிடைக்கவில்லை. இருந்தாலும் அவர் துவளவில்லை. முயற்சித்தார். மாற்றத்தைக் கொண்டு வந்தார். இன்றைய சீனத்தின் பணக்காரர் ஆனார். அலிபாபா என்ற நிறுவனத்தின் மதிப்பும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது’’

கண்ணன் : “இவர்களிடம் எத்தனை பொறுமை அப்பா. வியப்பாக இருக்கிறது. நாம் ஒரு இலட்சியத்தை நிர்ணயித்து அதை நோக்கி போகும் போது தடைகள் ஆயிரம் வந்தாலும், தோல்விகள் நம்முடைய நம்பிக்கையை சோதித்தாலும் முயற்சிப்பதைக் கைவிடாமல் தோல்விக்குப் பின் வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கையோடு முன்னேற வேண்டுமில்லையா அப்பா?’’

அப்பா : “ஆமாம் கண்ணன். மிகச்சரியாகப் புரிந்து கொண்டீர்கள். நான் உங்களுக்கு இரண்டு எடுத்துக்காட்டுக்களைத் தான் கூறினேன். இன்னும் இவர்களைப் போன்ற எத்தனையோ தலைவர்கள் உள்ளனர். அவர்கள் பற்றி நீங்கள் தேடிப் படிக்க வேண்டும். தோல்விகள் என்பது கற்றுக்கொள்வதற்கான அடுத்த வாய்ப்பு என்பதை இவர்களின் வாழ்வின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும்.’’

கண்ணன் : “நான் நூலகத்தில் தேடுகிறேன். அம்மாவிடம், ஆசிரியரிடம் மற்றும் தாத்தா, பாட்டினு பெரியவர்களிடமும் கேட்டுப் படிக்கிறேன் அப்பா’’

சுருக்கம்

சாதனையாளர்கள் யாரும் முதல் தடவை வென்றதில்லை. தோல்விகள் துரத்தியடித்தாலும் தோல்விகளைக் கண்டு துவளாமல் தங்கள் தோல்விகள் மூலம் படிப்பினைகளைப் பெற்று அவர்கள் சாதனை படைத்தார்கள். இப்பாடத்தில் தோல்விக்கு மேல் தோல்விகளை சந்தித்து அதனைக் கடந்து விடாமுயற்சியுடனும், நம்பிக்கையுடனும், தோல்விகள் கொடுத்த படிப்பினை மூலமும் வெற்றியை எட்டிய இருவர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அது போன்ற தலைவர்கள் பற்றி தேடிப் படித்து பயனடையுங்கள். உங்கள் இலட்சிய பாதையில் வரும் தடைகளை உடைத்தெறிந்து நாளைய தலைவராகிடுவோம்.

பயிற்சி

பயிற்சி

பின்வரும் வினாக்களுக்கு விடை தருக.

1) இப்பாடத்தின் மூலம் நீங்கள் கற்றுக் கொண்ட தலைமைத்துவ பண்புகள் இரண்டினைக் குறிப்பிடுக.
……………………………………………………………………………………………………………………………………………….

2) சீனாவின் அலிபாபா நிறுவனத்தின் நிறுவனர் யார்?
………………………………………………………………………………………………………………………………………………..

3) மின் விளக்கைக் கண்டுபிடித்தவர் யார்?
………………………………………………………………………………………………………………………………………………..

4) தோல்விகளைக் கண்டு ஏன் துவளக் கூடாது?
………………………………………………………………………………………………………………………………………………..

5) வெற்றி பெறுவதற்கு நாம் எவ்வாறு முயற்சிக்க வேண்டும்?
…………………………………………………………………………………………………………………………………………………