கண்ணா : “அப்பா, தலைமைத்துவத்திற்கான முக்கியமான பண்புகளை ஒவ்வொன்றாக சொல்லித்தருவதாக சொன்னீர்களே’’
அப்பா : “நிச்சயமாக கூறுகிறேன். தலைவராக இருப்பதை பற்றி கற்றுக் கொண்டோம். அடுத்ததாக தலைமைத்துவத்திற்கான பண்புகளில் ஒன்றான தன்னம்பிக்கையைப் பற்றி பார்ப்போம்.’’
கண்ணன் : “சரி அப்பா’’
அப்பா : “நான் ஒரு கால்பந்து அணிக்கு தலைவனாக இருக்கிறேன் என்றால், நிச்சயமாக வெல்ல முடியும் என்ற நம்பிக்கையும், மேலும் என் அணியை சிறப்பாக வழிநடத்த முடியும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்க வேண்டும். அத்தகைய நம்பிக்கை எத்தனை தோல்விகளை சந்தித்தாலும் முயற்சிக்க வேண்டுமென்ற உந்துதலைக் கொடுக்கும்.. வெற்றியைத் தொடும் வரை என்னால் முடியும் என்ற நம்பிக்கையோடு முயற்சியுங்கள்.’’
கண்ணன் : “அப்பா, நம் மீது நாம் வைக்கும் நம்பிக்கைக்கு பெயர் என்ன?’’
அப்பா : “நம் மீது நாம் வைக்கும் நம்பிக்கை தன்னம்பிக்கை. இதற்கு என் வாழ்விலிருந்து ஒரு எடுத்துக்காட்டை உங்களுடன் பகிர்கிறேன்.
கண்ணன் : ‘‘வாவ். கதை சொல்லப் போகிறீர்களா அப்பா?’’
அப்பா : “ஆமாம். கண்ணன் நான் எனது பள்ளியில் இன்டர் ஹவுஸ் (Inter House) விளையாட்டுப் போட்டியில் நடைப்பெறும் ஓட்டப்பந்தயத்திலும் கலந்து கொள்வேன். நான் எனது பள்ளியின் சாம்பியன் (Champion). இருந்தாலும் அதிகாலையில் எழுந்து மைதானத்திற்கு சென்று தினமும் ஓடுவேன். முயற்சிக்காத நம்பிக்கையில் பயனில்லை. நான் அப்பொழுது பதினொன்றாம் வகுப்பில் படித்துக்
கொண்டிருந்தேன். இன்டர் ஹவுஸ் (Inter House) விளையாட்டுப் போட்டிகளும் நடைப்பெற்றது. நானும் கலந்து கொண்டேன். ஓடும் போது நிலைத்தடுமாறி யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் விழுந்து விட்டேன். முதலில் சென்று கொண்டிருந்த என்னைத் தாண்டி எல்லோரும் ஓடினார்கள். என் நண்பர்கள், என் ஆசிரியர்கள் என்னை போட்டியிலிருந்து வெளியேறும்படி கூறுவது என் காதில் விழுந்தது. ஆனால் என் மனம் நீ விழுந்திருக்கிறாய் எழுந்து கொள் என்றது… நான் எழுந்தேன். யார் எத்தனை தூரம் ஓடியிருக்கிறார்கள் என்றெல்லாம் நான் கவனிக்கவில்லை. என் கவனம் வெற்றியில் இருந்தது. உன்னால் முடியும். உன்னால் முடியும்.. ஓடு என்று என்னை நானே ஊக்கப்படுத்திக் கொண்டேன். நான் ஓட ஓட வெற்றியின் நெருக்கத்தை உணர்ந்தேன். வெற்றி பெற வேண்டும் என்கின்ற நம்பிக்கை என் வேகத்தை அதிகரித்தது. நான் முழு தூரத்தையும் ஓடி விட்டு தான் திரும்பிப் பார்த்தேன். என்னைத் தூக்கி சுற்றினார்கள். என்னைத் தாண்டி ஓடியவர்களை நான் என் நம்பிக்கையால் கடந்து வந்து முதலிடத்தை பெற்றிருந்தேன். அந்த வருடத்திலும் சாம்பியன் (Champion) ஆனேன். நான் பிறர் முடியாது வந்துவிடு என்று சொன்னதும் ஒதுங்கியிருந்தால் என்னுடைய வெற்றி சாத்தியமில்லை.’’
கண்ணன் : “அப்பா, நீங்கள் சூப்பர் (Super)’’
அப்பா : “ஓடும் போது மட்டும் தான் விழுவோம் என்றில்லை கண்ணா! ஒரு தலைவன் எழும் முன் ஓரிரு தடவையல்ல பல நூறு தடவைக் கூட விழலாம். அதற்காக அவன் ஓய்ந்து போகக் கூடாது. சமூகத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ அவன் தோல்விகளில் கற்ற பாடத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு இலக்கை வைத்து அதை அடைவேன் என்ற நம்பிக்கையுடன் அவன் எட்டுக்களை எடுத்து வைக்க வேண்டும். உன்னால் முடியாது என்கிற பிறர் குரல்களை தள்ளி வைத்து விட்டு, உன்னால் முடியும் என்ற நம்பிக்கையை நீங்களே உங்களுக்கு ஊட்டிக் கொண்டு இலட்சியத்தை நோக்கி செல்லுங்கள். நீங்களும் நாளைய தலைவர் ஆகலாம்’’
உலகில் தோன்றிய தலைவர்கள் எல்லோரும் தோல்விகளை சந்தித்தவர்கள். இருந்தாலும் நம்பிக்கை மற்றும் விடாமுயற்சியினால் அவர்கள் மிகச்சிறந்த தலைவர்கள் என்ற அங்கீகாரத்தை சமூகத்தில் பெற்றுக் கொண்டார்கள். என்னால் முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சித்தால் நிச்சயமாக நீங்களும் சிறந்த தலைவனாகவும் வெற்றியாளராகவும் மாற முடியும்.
பயிற்சி
பின்வரும் வினாக்களுக்கு விடை தருக.
1) நம் மீது நாமாக வைக்க வேண்டிய நம்பிக்கையின் பெயர் என்ன?
……………………………………………………………………………………………………………………………
2) தலைமைத்துவத்திற்கும், வெற்றியாளருக்கும் இருக்க வேண்டிய பண்புகள் இரண்டினை இப்பாடத்திலிருந்து எழுதுக.
…………………………………………………………………………………………………………………………….
3) “நம்பிக்கையுடன் முயற்சித்தால் எதுவும் சாத்தியம்’’ இந்தக் கூற்றுக்கு பொருத்தமான பழமொழி ஒன்று பாடத்தில் இடம்பெற்றுள்ளது. அதனைக் குறிப்பிடுக.
……………………………………………………………………………………………………………………………..
4) பாடத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு ஆங்கில வார்த்தைகளைக் குறிப்பிடுக.
1. ………………………………………………….. 2. ……………………………………………………
5) கண்ணனின் அப்பா கலந்து கொண்ட இன்டர் ஹவுஸ் (Inter House) விளையாட்டுப் போட்டி எது? அவர் அதில் வெற்றியடைந்தாரா?
………………………………………………………………………………………………………………………………