• முகப்பு
  • சுகாதார விழிப்புணர்வு
  • 2.2 ஆரோக்கியமான உணவு பழக்கத்தை ஏற்படுத்துவோம்

2.2 ஆரோக்கியமான உணவு பழக்கத்தை ஏற்படுத்துவோம்

உள்ளடக்கம்

கண்ணனின் அம்மா சமைத்துக் கொண்டிருந்தார். யாழினி அம்மாவுக்கு உதவி செய்து கொண்டிருந்தாள்.

யாழினி : ‘‘அம்மா, எனது தோழி சசியின் வீட்டில் அவளது அம்மா தினமும் ஏதாவது ஒரு மாமிச உணவு சமைப்பார்களாம். ஆனால் நீங்கள் தினமும் பச்சை காய்கறிகளை தான் சமைக்கிறீர்கள். வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே மாமிசம் சமைக்கிறீர்கள். அண்ணனின் நண்பன் ரவி அண்ணாவின் அம்மா வேலைக்கு போவதால் வார இறுதி நாட்களை தவிர மற்ற நாட்களில் கடையில் தான் மதிய உணவு வாங்கி சாப்பிடுவாங்களாம். ஆனால் நீங்கள் கஷ்டப்பட்டு வீட்டில் சமைக்கிறீர்களே. ஏன் அம்மா?’’

அம்மா : ‘‘யாழினி இறைச்சி சத்தான உணவு தான். ஆனால் அதில் கொழுப்பு அதிகமுள்ளது. அதனால் அதனை மாதத்தில் ஒன்று அல்லது இருமுறை சாப்பிட்டாலே போதுமானது. தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது நம் உடல் நலத்தைப் பாதிக்கும். உடல் எடையை அதிகரிக்கும். அத்துடன் கடைகளில் வாங்கி உண்ணும் துரித உணவுகளாலும் நமது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. ஆனால் பச்சை காய்கறிகளில் ஏராளமான நன்மைகள் உள்ளன. அதனால் தான் தினசரி உணவில் இதனை சேர்த்துக் கொள்கிறேன். இதனால் தான் நான், நீங்கள், அப்பா, அண்ணா எல்லோருமே ஆரோக்கியமாக இருக்கிறோம்.’’

யாழினி : ‘‘துரித உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் அவ்வளவு தானா?’’

அம்மா : ‘‘இல்லை. இன்னும் நிறைய இருக்குது. துரித உணவுகளில் சுவையை அதிகரிப்பதற்காக கொழுப்பு, கார்போஹைட்ரேட், சீனி, எண்ணெய் போன்றவை அதிகளவில் சேர்க்கப்படுகின்றன. அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பதை போல் இவற்றை நாம் சாப்பிடுவதால் நம் உடலில் பாதகங்களே ஏற்படுகின்றன. நான் உங்களுக்கு அவற்றை பட்டியலிட்டு கூறுகிறேன்.

  • நீரிழிவு நோய் ஏற்படும்.
  • உடல் எடை அதிகரித்து வயதை மீறிய தோற்றத்தை தரும்.
  • அதிகம் எண்ணெய் சேர்த்த உணவுகளை உட்கொள்வதால் குடல் அழற்சி ஏற்படும்.
  • செரிமானப் பகுதியைப் பாதிக்கும்.
  • இறைச்சி போன்ற உணவுகள் செரிமானம் அடைய இரண்டு மணிநேரங்கள் எடுத்துக் கொள்ளும்.
  • இவ்வாறான உணவு பழக்கம் நாளடைவில் தோல், கூந்தல், நகங்கள் போன்ற உடல் உறுப்புக்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
  • எலும்புகள் வலுவிலக்கும்.
  • உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காததால் நோய்கள் ஏற்படும்.
  • உடல் வளர்ச்சியை பாதிக்கும்.

துரித உணவுகளை ஏன் சாப்பிடக் கூடாது என்பதற்கு இவை தான் காரணம். என் பொண்ணு யாழினிக்கு இப்போது புரிகிறதா?”

யாழினி : ‘‘ஆமாம் அம்மா. ஆரோக்கியமான உணவுகள் என்றால் என்ன அவற்றை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?’’

அம்மா : “நமது உடலுக்கு ஊட்டமளித்து நமது ஆரோக்கியத்தை பேணக்கூடிய உணவுகள் அனைத்தும் ஆரோக்கியமான உணவுகள் எனப்படும். இவற்றிற்கு உதாரணம் : இயற்கையாக விளையக் கூடிய காய்கறிகள், கீரை வகைகள், பால், முட்டை, தானியங்கள் ஆகும்.

நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய ஊட்டம் அளிக்காதஉணவுகள் அனைத்தும் ஆரோக்கியமற்ற உணவுகள் எனப்படும். இவற்றிற்கு உதாரணம் : பீஸா, வடை, பனிஸ் போன்ற துரித உணவுகள் ஆகும்.

ஆரோக்கியமான உணவுகளை நாம் தினமும் உட்கொள்வதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் பின்வருமாறு :

  • கட்டுக்கோப்பான உடலமைப்பு கிடைக்கும்.
  • நோய்களிலிருந்து பாதுகாப்பு பெறலாம்.
  • செரிமானப்பகுதி, நரம்பு மண்டலம், இனப்பெருக்கப்பகுதி ஆகியவை சீராக இயங்கும்.
  • சுறுசுறுப்புடன் இருக்க முடியும்.
  • வலுவான எலும்புகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
  • நீளமான கூந்தலை பெறலாம்.
  • நகங்கள் உடையாது.
  • தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாது.
  • இளமையான தோற்றம் கிடைக்கும்.
  • உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து அனைத்தும் கிடைக்கும்.

ஆரோக்கியமான உணவிலும் அதிகமாக சாப்பிட வேண்டியவை, குறைவாக சாப்பிட வேண்டியவை என்பவற்றை உள்ளடக்கி ஒரு முக்கோண அமைப்பு உள்ளது. (கீழே படத்தில் காட்டப்பட்டுள்ளது). அதனைப் பின்பற்றி தான் நாம் நம் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.’’

யாழினி : ‘‘ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கத்தை பின்பற்றி நானும் ஆரோக்கியமாக இருப்பேன் அம்மா’’

அம்மா : ‘‘நிச்சயமாக யாழினி! நானும் அதனையே விரும்புகிறேன்’’

சுருக்கம்

ஆரோக்கியமான ஊட்டச்சத்து மிக்க உணவுகளால் உடல் நலம் பேணப்பட்டு பிணிகளிலிருந்து பாதுகாப்பு பெறலாம். ஆரோக்கியமற்ற துரித உணவுகளை அதிகம் சாப்பிடுவதனால் உடல் நலம் சீர்கெட்டு உடலில் பல்வேறு பிணிகளை ஏற்படுத்தும். ஆகவே ஆரோக்கியமான உணவு பழக்கத்தை பின்பற்றி நலமாகவும் மகிழ்ச்சிகரமாகவும் வாழ்வோம்.

பயிற்சி

பயிற்சி

பின்வரும் வினாக்களுக்கு விடை தருக.

1) ஆரோக்கியமான உணவு என்றால் என்ன?
……………………………………………………………………………………………………………………………………………………………….
……………………………………………………………………………………………………………………………………………………………….

2) ஆரோக்கியமான உணவுகள் மூன்றைக் குறிப்பிடுக.
……………………………………………………………………………………………………………………………………………………………….

3) ஆரோக்கிமற்ற உணவுகள் என்றால் என்ன?
……………………………………………………………………………………………………………………………………………………………….
……………………………………………………………………………………………………………………………………………………………….

4) துரித உணவுகள் இரண்டினை பெயரிடுக.
……………………………………………………………………………………………………………………………………………………………….

5) ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் இரண்டினைக் குறிப்பிடுக.
I. ……………………………………………………………………………………………………………………………………………………………
II. …………………………………………………………………………………………………………………………………………………………..

6) ஆரோக்கியமற்ற உணவு பழக்கவழக்கத்தினால் ஏற்படும் விளைவுகள் இரண்டைக் குறிப்பிடுக.
I. ……………………………………………………………………………………………………………………………………………………………
II. …………………………………………………………………………………………………………………………………………………………..