• முகப்பு
  • சுகாதார விழிப்புணர்வு
  • 2.1 தினமும் உடற்பயிற்சிகள் செய்வோம்

2.1 தினமும் உடற்பயிற்சிகள் செய்வோம்

உள்ளடக்கம்

காலை சூரியன் உதித்திருந்தது. கண்ணனும் யாழினியும் யோகா கற்றுக் கொள்வதற்காக அவர்கள் அம்மாவின் முன் ஆசனமிட்டு வசதியாக அமர்ந்திருந்தார்கள்.

அம்மா : ‘‘தினமும் யோகா செய்யும் முன் மூச்சுப் பயிற்சி செய்யலாம். நான் சொல்லும் படிமுறைகளை நன்கு கேட்டுக் கொள்ளுங்கள்.

  • முதலில், கால்களை வசதியாக வைத்து உட்காருங்கள்.
  • பின், கைகளை முட்டுக்கால்களில் படுமாறு வையுங்கள்.
  • பின்னர், கண்கள் இரண்டையும் மூடுங்கள்.
  • இப்பொழுது மூச்சை மெதுவாக மிக மெதுவாக உள்ளிழுக்க வேண்டும்.
  • இதன்போது வயிற்றில் காற்று நிரம்பியதை உணர்வீர்கள்.
  • ஒரு பலூனிலிருந்து மெதுவாக மிக மெதுவாக காற்றை வெளியேற்றுவதை போல் உள்ளிழுத்த மூச்சை வெளியேற்றுங்கள்.
  • இவ்வாறு 10 நிமிடங்களுக்கு செய்யுங்கள்.

நான் சொன்ன படிமுறைகளின் படி உங்களுக்கு செய்து காட்டுகிறேன். நான் செய்யும் முறையை நன்கு கவனித்து விட்டு பின்னர் செய்யுங்கள்.’’

கண்ணனும் யாழினியும் அவர்களது அம்மா சொன்ன படிமுறைகளை பின்பற்றி மூச்சு பயிற்சியை வெற்றிகரமாக செய்து அம்மாவிடம் பாராட்டை பெற்றார்கள்.

கண்ணன் : ‘‘அம்மா, இவ்வாறு மூச்சுப்பயிற்சிகள் செய்வதனாலும் யோகா மற்றும் தியானம் செய்வதாலும் நமக்கு கிடைக்கக் கூடிய நன்மைகள் என்ன?’’

அம்மா : ‘‘தியானம் மற்றும் யோகா மாதிரியான உடற்பயிற்சிகளினால் ஏராளமான நன்மைகள்
இருக்கின்றன. அவற்றுள் சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறேன்.

  • மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வை குறைக்க உதவுகிறது.
  • அழற்சியைக் குறைக்க உதவுகிறது.
  • இதயத்தை வலுப்படுத்துகிறது.
  • கட்டுக்கோப்பான உடலை பெற உதவுகிறது.
  • உடல் வலிமை அதிகரிக்கிறது.
  • ஆரோக்கியமான வாழ்க்கையைப் பெற வழிவகுக்கிறது.
  • நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது.
  • நல்ல தூக்கத்தை தருகிறது.
  • சீரான மூச்சினை வெளியிட உதவுகிறது.
  • எந்த விதமான உடல்பயிற்சியையும், வேலைகளையும் செய்வதற்கு வளைந்து கொடுக்க கூடிய உடலையும் வலிமையையும் தருகிறது.
  • உடல் சமநிலை பேணப்படுகிறது.
  • சிறந்த உணவு பழக்க வழக்கத்தை பேண உதவுகிறது.
  • ஒற்றைத் தலைவலிக்கு நிவாரணியாக இருக்கிறது.
  • உடலில் காணப்படும் பல்வேறு விதமான நோய்களுக்கும், மூட்டு வலி போன்ற நோய்களுக்கும் நிவாரணியாக செயல்படுகிறது.
  • மகிழ்ச்சிகரமான மனநிலையை உருவாக்குகிறது.
  • கவன சிதறலை குறைக்க, பாடங்களை சிறப்பாக கற்றுக்கொள்ள வழிவகுக்கிறது.
  • உடல் எடை குறைப்பிலும் உதவுகிறது.
  • தியானத்தின் மூலம் மனஅமைதி கிடைக்கிறது.

தொடர்ச்சியாக யோகா போன்ற உடற்பயிற்சிகளை செய்வதன் மூலமாக மேற்குறிப்பிட்ட பயன்களை நம்மால் காண முடியும்.’’

கண்ணன் : ‘‘யோகாவில் எத்தனை வகைகள் இருக்கு அம்மா? அவற்றை சொல்லித் தரீங்களா?’’

அம்மா : ‘‘பல வகையான யோகா இருக்கு கண்ணா. அவற்றில் சிறுவர்கள் செய்யக் கூடிய 16 வகையான யோகாசன பயிற்சியின் பெயர்களை கூறுகிறேன்.

  1. Bridge Pose (சேது பந்தா சர்வங்காசனம்)
  2. Tree Pose (விருக்ஷாசனம்)
  3. Cobra Pose (புஜங்காசனா)
  4. Cat Pose (மர்ஜரியாசனம்)
  5. Bow Pose (தனுராசனா)
  6. Frog Pose (மண்டுகாசனா)
  7. Easy Pose (சுஹாசனா)
  8. Butterfly Pose (சுப்த பத்தா கோனாசனா)
  9. Corpse Pose (சாவாசனம்)
  10. Chair Pose (உத்கடாசனா)
  11. Hero Pose (வீராசனா)
  12. Boat Pose (நௌகாசனம்)
  13. Mountain Pose (தடாசனா)
  14. Happy Baby Pose (ஆனந்த பலாசனா)
  15. Lion Pose (சிம்ஹாசனா)

இவற்றை இணையத்தளத்திலும் கற்றுக் கொண்டு வீட்டில் பயிற்சி செய்யலாம். தினமும் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டால் நோய்கள் நெருங்காது. ஆரோக்கியத்துடன் வாழ முடியும்’’

யாழினி : ‘‘யோகாவை ஒரு முறை செய்து விட்டு தொடர்ச்சியாகச் செய்யாமல் விடுவதால் நன்மைகள் கிடைக்காதா அம்மா?’’

அம்மா : ‘‘யாழினி, யோகா என்றில்லை. எந்த செயல்பாடானாலும் தொடர்ச்சியாக செய்தால் மட்டுமே நன்மை கிட்டும். முயற்சி திருவினையாக்கும்.’’

கண்ணன் : ‘‘யோகா செய்வது கடினமா அம்மா? உடல் வலிக்குமா?’’

அம்மா : ‘‘இல்லை கண்ணா, முதன் முதலாக யோகா செய்யும் போது நிச்சயம் கடினமாக இருக்கும். களைப்பு தெரியாமல் இருக்க இடையில் நாம கொஞ்சம் நடனம் ஆடலாம். பாடலாம்…. இப்படி என்ஜாய் (Enjoy) பண்ணிகிட்டே யோகா செய்கையில் நமக்கு சலிப்பும் ஏற்படாது. களைப்பும் தெரியாது. முதல் தடவை எழுதும் போது நமக்கு கடினமாக தானே இருந்தது. பழக பழக தான் எந்த காரியமும் எளிதாக இருக்கும். யோகாவும் அது போல தான். திரும்ப திரும்ப பயிற்சி செய்வதினால் மட்டுமே சாத்தியமாகும்’’

கண்ணன் : ‘‘அடிக்க அடிக்க அம்மியும் நகரும் இல்லையா அம்மா?’’

அம்மா : ‘‘அழகாக சொல்லிட்டீங்க கண்ணா. மிக அருமை. உண்மையும் கூட’’

சுருக்கம்

தியானம், மூச்சு பயிற்சி, யோகா போன்ற உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் உடல்
ஆரோக்கியம் பேணப்படும். இன்னும் பல்வேறு வகையான நன்மைகளை பெற முடியும் என்பதை இப்பாடத்தின் மூலம் கற்றுக் கொண்டிருப்பீர்கள். யோகா என்பது உடலுக்கு மட்டுமல்ல மனதிற்குமான பயிற்சி ஆகும். இது மனதை ஒருநிலைப்படுத்த உதவுகிறது. நோய்களுக்கான நிவாரணியாக செயல்படுகிறது.

பயிற்சி

பயிற்சி – 1

பின்வரும் வினாக்களுக்கு விடை தருக.

1) யோகாவின் வகைகள் ஐந்தினை பெயரிடுக.
I. ………………………………………………………………………………………………………………………………..
II. ……………………………………………………………………………………………………………………………….
III. ………………………………………………………………………………………………………………………………
IV. ………………………………………………………………………………………………………………………………
V. ………………………………………………………………………………………………………………………………..

2) யோகா செய்வதினால் ஏற்படக்கூடிய நன்மைகள் ஐந்தினை எழுதுக.
I. ……………………………………………………………………………………………………………………………….
II. ………………………………………………………………………………………………………………………………
III. ……………………………………………………………………………………………………………………………..
IV. ………………………………………………………………………………………………………………………………
V. ……………………………………………………………………………………………………………………………….

 

பயிற்சி – 2

மூச்சுப் பயிற்சி செய்யும் செயல் முறையை செய்து காட்டுக.

 

பயிற்சி – 3

பாடத்தில் கூறப்பட்டுள்ள 15 வகையான யோகாசனத்தையும் தினமும் ஒவ்வொன்றாக கற்று தினமும் பயிற்சி செய்க.