• முகப்பு
  • பசுமைச் சுற்றுச்சூழல்
  • 8.1 சுற்றுச்சூழல் மாசடைவதைத் தவிர்ப்போம்

8.1 சுற்றுச்சூழல் மாசடைவதைத் தவிர்ப்போம்

உள்ளடக்கம்

நான்காம் வகுப்பு ஆசிரியர் அவ்வகுப்பு மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் மாசடைவதைப் பற்றி கற்றுக் கொடுப்பதற்கு தயாரானார். வாருங்கள் நாமும் அவற்றை அறிந்து கொள்ளலாம்.

 ஆசிரியர் : “மாணவர்களே! இன்றைய பாடம் சுற்றுச்சூழல் மாசடைதல் என்பதாகும்”

 ராகேஷ் : “டீச்சர், சுற்றுச்சூழல் என்றால் என்ன?”

 ஆசிரியர் : “நம்மைச் சுற்றியுள்ள அனைத்துமே சுற்றுச்சூழல் ஆகும். இவற்றில் உயிருள்ளவை, உயிரற்றவை என அனைத்தும் உள்ளடங்கும். நம்மைச்  சுற்றியுள்ளவற்றினால் மனிதன் அதிக நன்மை அடைகிறான். ஆனால், இயற்கைக்கு முரணான காடு அழித்தல் போன்ற மனித செயல்பாடுகளால் சுற்றுச்சூழலை மனிதன் மாசுபடுத்தவும் செய்கிறான். இதனால் ஏற்படும் பாதிப்புக்கள் பல.

சுற்றுச்சூழல் மாசடைதல் என்பது முக்கியமாக பின்வரும் மூன்று சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

  1. நிலம்
  2. நீர்
  3. காற்று

நிலம் மாசடைதல்

மண்ணைத் தோண்டுதல், காடுகளை அழித்தல், பிளாஸ்டிக் போன்ற மண்ணோடு மக்காத குப்பைக்கூளங்களை நிலத்தில் புதைத்தல், அணுகுண்டு பரிசோதனைகள், உள்நாட்டு யுத்தம், விவசாயத்திற்கு கிருமிநாசினி பயன்படுத்தல், இரசாயன உரத்தைப் பயன்படுத்தல், பேரழிவுகள் ஏற்படுதல் போன்ற காரணங்களால் நிலம் பாதிப்படையும். இதனால் ஏற்படும் விளைவுகளாவன :

  • மண்வளம் குன்றுதல்
  • இதனால் விவசாயம் பாதிப்படைதல்
  • பஞ்சம், பட்டினி போன்ற நிலைமை உருவாகுதல்
  • வறட்சி ஏற்படுதல்
  • வெப்பநிலை அதிகரித்தல்

நிலம் மாசடைதலைத் தடுப்பதற்கான வழிமுறைகள் :

  • காடழிப்பைத் தவிர்த்தல்
  • மண்பாதுகாப்புத் திட்டங்களை முன்மொழிதல்
  • மக்களுக்கு விழிப்புணர்வை வழங்குதல்
  • இயற்கை உரங்களைப் பயன்படுத்தல்
  • சுழற்சி முறை விவசாயத்தை மேற்கொள்ளல்
  • பிளாஸ்டிக் போன்ற பொருட்களை மீள்சுழற்சி செய்து உபயோகித்தல்

நீர் மாசடைதல்

கழிவுப்பொருட்களை நீரில் வீசுதல், தொழிற்சாலைகளின் கழிவுகள், கிருமிநாசினிகளைப் பயன்படுத்தும் போது அவை நீருடன் கலத்தல், நீருக்கு அடியில் அணுகுண்டு பரிசோதனைகளை மேற்கொள்ளல் போன்ற மனித செயல்பாடுகளால் பெரிய அளவில் நீர் மாசுபடுகின்றது. நீர் மாசடைவதால் ஏற்படும் விளைவுகளாவன :

  • தொற்று நோய்கள் அதிகரித்தல்
  • வறட்சி ஏற்படுதல்

நீர் மாசடைதலை தடுப்பதற்கான வழிமுறைகள் :

  • மழைநீரை சேமித்தல்
  • குப்பைக்கூளங்களை நீரில் இடுவதைத் தவிர்த்தல்
  • நீரை மாசுப்படுத்துவோர் மீது கடும் சட்ட நடவடிக்கைகள் எடுத்தல்
  • மாணவர்கள் மற்றும் மக்களுக்கு நீரின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை வழங்குதல்
  • சர்வதேச ரீதியாக சட்டங்களை அமுல்படுத்தல்

காற்று மாசடைதல்

நம்மை சூர்ந்துயுள்ள காற்று மண்டலமே காற்று ஆகும். மனிதன் மற்றும் மற்ற எல்லா உயிரனங்களின் உயிர்வாழ்வுக்கும் காற்று மிக முக்கிய கூறாகும். இருந்தாலும் காடு அழித்தல், அணுகுண்டு பரிசோதனை, பயன்பாடு மற்றும் தாக்குதல், கிருமிநாசினிகளின் பயன்பாடு, தொழிற்சாலைகளின் கழிவு வாயுக்கள், வாகனங்களினால் வெளியேறும் புகை, விண்வெளி பயண முயற்சி போன்ற மனித செயல்பாடுகளால் காற்று மாசடைகின்றது. இதனால் ஏற்படும் விளைவுகளான :

  • சுவாச நோய்கள், தோல் நோய்கள் அதிகரித்து வருதல்
  • புவி வெப்பமடைதல்
  • இதனால் பனிப்பாறை உருகுதல்
  • தற்ப வெப்பநிலை அதிகரித்தல்
  • காலநிலை மாற்றம்

காற்று மாசடைதலை தடுப்பதற்கான வழிமுறைகள் :

  • மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தல்
  • கழிவுப்பொருட்கள் மற்றும் வாயுக்களை மீஞ்சுழற்சிக்கு உட்படுத்தல்
  • ஈயமற்ற பெட்ரோலைப் பயன்படுத்தல்
  • காட்டுவளத்தைப் பாதுகாத்தல்
  • நச்சு வாயுக்களை வெளியிடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுத்தல்

சுற்றுச்சூழல் மாசடைதலால் மனிதர்கள் மட்டுமல்ல நம்மைச் சூழ்ந்துள்ள அனைத்தும் பாதிப்படைந்து சுற்றுச்சூழல் சமனிலை இழக்கப்படுகின்றது. சுற்றுச்சூழல் மாசடைதலைத் தடுப்பதற்காக கூறப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றுவோம். மாணவர்களே இன்றைய பாடம் புரிந்ததா?”

 மாணவர்கள் : “புரிந்தது டீச்சர்”

 ஆசிரியர் : “சரி அப்படியானால் நான் தரும் பயிற்சிகளை செய்து காட்டுங்கள்”

சுருக்கம்

நம்மைச் சுற்றியுள்ள அழகிய சுற்றுச்சூழலின் சமனிலை பேணப்படும் போது தான் நம்மால் சுற்றுச்சூழலிருந்து பூரணமான நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். நீர், நிலம், காற்று ஆகிய சூழலியல் கூறுகள் மனித செயல்பாடுகளால் எவ்வாறு பாதிப்படைகின்றன, அதனால் ஏற்படும் விளைவுகள் மற்றும் அதனை தடுப்பதற்கான வழிமுறைகளை இப்பாடத்தின் மூலம் கற்றுக் கொண்டீர்கள். அவற்றை வாழ்விலும் செயல்படுத்தி சுற்றுச்சூழல் மாசடைவதைத் தவிர்ப்போம்.

பயிற்சி

பின்வரும் வினாக்களுக்கு விடை தருக.
01) சுற்றுச்சூழல் என்றால் என்ன?
……………………………………………………………………………………………………………………………………………………………..

02) சூழலியல் கூறுகளைக் குறிப்பிடுக.
………………………………………………………………………………………………………………………………………………………………

03) பின்வரும் கூறுகளை மாசுபடுத்தும் மனித செயல்பாடுகள் ஒவ்வொன்று வீதம் எழுதுக.
நிலம் – ………………………………………………………………………………………………………………………………………..
நீர் – …………………………………………………………………………………………………………………………………………
வளி – …………………………………………………………………………………………………………………………………………

04) பின்வரும் கூறுகள் மாசுபடுவதைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் வழிமுறைகளை ஒவ்வொன்று வீதம் எழுதுக.
நிலம் – ………………………………………………………………………………………………………………………………………..
நீர் – …………………………………………………………………………………………………………………………………………
காற்று – …………………………………………………………………………………………………………………………………………

05) சுற்றுச்சூழல் மாசடைவதால் ஏற்படும் விளைவுகள் ஐந்து தருக.
1. …………………………………………………………………………………………………………………………………………………..
2. …………………………………………………………………………………………………………………………………………………..
3. …………………………………………………………………………………………………………………………………………………..
4. …………………………………………………………………………………………………………………………………………………..
5. …………………………………………………………………………………………………………………………………………………..