கண்ணனி்ன் வீடு மூன்று அறைகளைக் கொண்ட சிறிய வீடு. அதில் கண்ணன், அவனது பெற்றோர் மற்றும் தங்கை வசிக்கின்றனர். கண்ணனுக்கு ஒரே தங்கை. அவள் பெயர் யாழினி. கண்ணனின் தந்தை ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். கண்ணன் இரண்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கிறான். அவனது தங்கை யாழினி பாலர் பாடசாலை செல்கிறாள்.
அன்று ஞாயிற்றுக்கிழமை. விடுமுறை நாள் என்பதால் அன்று கண்ணனது குடும்பத்தினர் வீட்டில் இருந்தார்கள். கண்ணனின் அம்மா சமையலறையில் காலை உணவு தயாரித்துக் கொண்டிருந்தார்.
கண்ணனும் யாழினியும் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
‘‘கண்ணா, யாழினி இரண்டு பேரும் இங்க வாங்க’’ கண்ணன் மற்றும் யாழினியின் அப்பா அழைப்பதைக் கேட்ட சிறுவர்கள் இருவரும் ஓடி வந்தார்கள்.
அப்பா :- ‘‘கழிப்பறையை எப்படி சுத்தம் பண்றது, தினமும் கழிப்பறையை எப்படி சுத்தமா உபயோகிக்கிறதுனு இன்னைக்கு நான் உங்க இரண்டு பேருக்கும் சொல்லிக் கொடுக்க போகிறேன்’’
கண்ணன் :- ‘‘சூப்பர் (Super)… நான் தான் முதலில் சுத்தம் பண்ணுவேன்’’
அப்பா :- ‘‘சரி. கழிப்பறையை சுத்தம் பண்ண முதல்ல இரண்டு பேரும் இந்த பையிலுள்ள கையுறையையும், காலணிகளையும் போட்டுக்குங்க பார்க்கலாம்’’
கண்ணன், யாழினி இருவரும் சுறுசுறுப்பாக தங்கள் கையணிகளையும் காலணிகளையும் அணிந்து கொண்டனர்.
யாழினி :- ‘‘அப்பா போட்டுட்டோம். ஆனால் எதுக்கு இதெல்லாம் போடணும்’’
அப்பா :- ‘‘யாழினி, கழிப்பறையில நம்ம வெறும் கண்ணுக்கு தெரியாத கொரோனா மாதிரி வேறு நுண்ணுயிர்கள் இலட்சக்கணக்கில் இருக்கும். அந்த கிருமிகள் நம்ம உடம்புக்குள்ள போச்சுனா நமக்கு புதுசு புதுசா ஒவ்வொரு நோய் வரும். அதிலிருந்து நம்மல பாதுகாக்க தான் இதெல்லாம் கட்டாயமாக அணிந்து கொள்ள வேண்டும். சரி முதலில் கண்ணா சுத்தம் பண்ணுங்க அப்பா சொல்லி கொடுக்குறேன். அப்புறம் அண்ணா பண்றத பார்த்துட்டு யாழினி பாப்பா பண்ணுங்க’’
கண்ணன் :- ‘‘சரி அப்பா’’
அப்பா :- ‘‘கழிப்பறையை சுத்தம் செய்வதை முகம் பார்க்கும் கண்ணாடியிலிருந்து ஆரம்பிக்கலாம்.
கண்ணன் மிக அழகாக கண்ணாடியை துடைத்தான்.
அப்பா :- ‘‘கண்ணா நல்ல பிள்ளை. அழகா துடச்சிட்டீங்க. அடுத்து இந்த சிங்க்கை சுத்தம் பண்ணனும்.
கண்ணா இப்போ செய்ங்க’’
கண்ணன் :- ‘‘அப்பா நான் பண்ணிடேன். இப்போ என்ன பண்ணனும்?’’
அப்பா :- ‘‘வெரிகுட்.. இப்போ சிங்க்ல இருக்க குழாய திறந்து அந்த சின்ன பாத்திரத்துக்கு நீர் பிடிச்சி சிங்க்ல இருக்க சோப்பு போற வரைக்கும் கழுவி விடுங்க’’
யாழினி :- ‘‘வாவ் அண்ணா… சிங்க் பிரகாசமா இருக்கு’’
கண்ணன் :- ‘‘நன்றி யாழினி’’
அப்பா :- ‘‘கண்ணா இப்போ கழிப்பறையின் இழுப்பறைப் பெட்டியை (Toilet Commode) சுத்தம் பண்ணனும்.
அதுக்கு அப்பறம் நாம கழிப்பறையின் சுவரை கழுவலாம்.
கண்ணன் :- ‘‘சரி அப்பா’’
சிறிது நேரத்திற்கு பின்……….
கண்ணன் :- ‘‘அப்பா… யாழினி… வந்து பாருங்க.. நான் சுத்தம் பண்ணிட்டேன்’’
யாழினி :- ‘‘வாவ் அண்ணா… சூப்பர்… அப்பா அண்ணனுக்கு எத்தனை புள்ளிகள் கொடுப்பீங்க?’’
அப்பா :- ‘‘உங்க அண்ணா… சூப்பரா பண்ணியிருக்காங்க….. அதனால நான் நூற்றுக்கு 100 புள்ளிகள் கொடுக்கிறேன்…. இப்போ யாழினி பண்ணுங்க… கண்ணா யாழினுக்கு சொல்லிக் கொடுங்க.. அதோட இரண்டு பேரும் கழிப்பறையைத் சுத்தம் பண்ணிட்டு கட்டாயமாக குளிக்கணும். இப்படி வாரத்தில் இரண்டு தடவை சுத்தம் பண்ணனும். வீட்டுல எல்லோரும் மாறி மாறி சுத்தம் பண்ணலாம். சரியா?’’
கண்ணன், யாழினி :- ‘‘சரி அப்பா’’
அப்பா :- தினமும் கழிப்பறையை எப்படி உபயோகிக்கணும் என்பதை இப்பொழுது நான் உங்க
இருவருக்கும் சொல்லித் தரேன்.
கண்ணன் :- ‘‘ஆமா அப்பா! நான் தினமும் நீங்க சொல்லிக்கொடுத்த மாதிரி பண்றேன். எங்க டீச்சர் சொல்லிருக்காங்க; சுத்தம் சுகம் தரும்னு’’
யாழினி :- ‘‘நானும் பண்ணுவேன் அப்பா’’
அதன் பின் யாழினியும் கண்ணனை போல் அழகாக கழிவறைய சுத்தம் செய்து அப்பாவிடம் பாராட்டை பெற்றுக் கொண்டார்கள். அம்மாவும் இருவரையும் பாராட்டினார்கள். கழிப்பறையைத் சுத்தம் செய்த பின் இருவரும் குளித்து தங்களை சுத்தம் செய்து கொண்டார்கள்.
அன்றாடம் கழிப்பறையை பயன்படுத்தும் நாம், அதனை பயன்படுத்தும் நேரங்களில் காலணி அணிவது மற்றும் பயன்பாட்டின் பின் கைகளை சோப்பு போட்டு கழுவுவது, கால்களையும் கழுவுவது சிறந்த பழக்கவழக்கமாகும். அத்துடன் கழிப்பறை முழுவதையும் வாரத்தில் இரண்டு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும். இப்பாடத்தில் கூறப்பட்டுள்ள கழிப்பறை விஷயங்களைக் கடைப்பிடிப்பதனால் நாம் சுகாதாரமான வாழ்க்கையைப் பெறுவோம்.
பயிற்சி – 01
பின்வரும் கேள்விகளுக்கு விடை தருக.
1) நாம் ஏன் கழிப்பறையை சுத்தம் செய்ய வேண்டும்?
____________________________________________________________
2) கழிப்பறையில் எத்தனை நுண்ணுயிர்கள் உள்ளன?
____________________________________________________________
3) தினமும் கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு செய்ய வேண்டிய இரண்டு விஷயங்கள் யாவை?
i. ____________________________________________________________
ii. ____________________________________________________________
4) கழிப்பறை கண்ணாடியில் தங்கியிருக்கும் ஒரு நுண்ணுயிரின் பெயரை குறிப்பிடுக.
____________________________________________________________
பயிற்சி – 02
சரியாக இருந்தால் சரி எனவும் தவறாக இருந்தால் தவறு எனவும் அடைப்புக்குள் அடையாளமிடுக.
1) கழிப்பறையைத் சுத்தம் செய்ய தண்ணீர் மட்டும் போதுமானது. ( )
2) கழிப்பறையிலுள்ள குழாய்களையும் சுத்தம் செய்ய வேண்டும். ( )
3) வாரம் இருமுறையாவது கழிப்பறை சுத்தம் செய்ய வேண்டும். ( )
4) கழிப்பறை சுவரை சுத்தம் செய்யக் கூடாது. ( )
5) கழிப்பறையில் இருக்கும் கண்ணாடியில் தூசு இருக்காது. ( )
6) கழிப்பறைக்கு செல்லும் போது காலணி அணிய வேண்டும். ( )