தாத்தா : “நாம் அடுத்ததாக கற்கப்போகும் பாடம் பிறருடன் ஒப்பிடாதீர்கள் என்பதாகும். பசங்களா கற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளீர்களா?”
நவீன், மேகனா, மீனா : “ஆமாம் தாத்தா! நாங்கள் ஆர்வமாக உள்ளோம்”
தாத்தா : “சீதா அழகாக இருக்கிறாள். நான் அழகாக இல்லை, தினேஷ் நன்றாக படிக்கிறான். என்னால் நன்றாக படிக்க முடியவில்லை, அவளிடம் நிறைய விளையாட்டுப் பொருட்கள் இருக்கின்றன. என்னிடம் இல்லை.. இப்படி பலவாறு பிறருடன் நம்மை ஒப்பிட்டுப் பார்த்து கவலைப்படுவதால் இல்லாதவற்றுக்கு ஏங்கத் தொடங்குவோம். இதனால் நம்மிடம் இருப்பவற்றின் மதிப்பை உணராது போய் விடுவோம். மேலும் மன அழுத்தம், தாழ்வு மனப்பான்மை, பிடிவாதம், அதிக கோபம், வெறுப்பு மற்றும் பொறாமை போன்ற பல தீய விளைவுகள் ஏற்படுகின்றன.”
நவீன் : “நம்மிடம் ஒரு சிறப்பான திறமையிருக்கிறது என்றால், என்னிடம் இப்படி ஒரு சிறப்பான திறமை இருக்கிறது. ஆனால் உன்னிடம் இல்லை என்று பிறரை தாழ்வாகப் பேசுவது போன்ற ஒப்பீட்டையும் செய்யக் கூடாது தானே?”
மீனா : “நிச்சயமாக அவ்வாறு செய்யக்கூடாது நவீன். அது அவர்கள் மனதை புண்படுத்தும் இல்லையா தாத்தா?”
தாத்தா : “ஆமாம் நீங்கள் இருவரும் கூறுவது சரியே! நாம் பிறரின் வாழ்க்கையுடன் நம்மை ஒப்பிட்டு கவலை கொள்ளவும் கூடாது. அவர்களைக் கண்டு பொறாமை கொள்ளவும் கூடாது. அதே நேரம் நாம் பிறரை விட உயர்ந்த அல்லது சிறப்பான திறமைகளைப் பெற்றிருந்தால் அதனை அவர்களுடன் ஒப்பிட்டு பெருமையடித்து மற்றவர் மனதை காயப்படுத்தவும் கூடாது”
மேகனா : “அப்படியானால் தாத்தா நாம் நம்மிடம் இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும். யாருடனும் யாரையும் ஒப்பிடத் தேவையில்லை. ஏனென்றால் எல்லோரிடமும் நிறைகள் மட்டுமல்ல குறைகளும் இருக்கின்றன. நான் சொல்வது சரியா தாத்தா?”
தாத்தா : “மிக்க சரி மேகனா! அத்துடன் பிறருடன் ஒப்பிடும் பழக்கம் உங்களிடம் இருந்தால் அதனை விடுத்து தன்னம்பிக்கையுடன் உங்களிடம் இலை மறை காயாய் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணரும் முயற்சியில் ஈடுபடுங்கள். பிறருடன் ஒப்பிடும் தீய பழக்கத்தை நீங்கள் விட்டால் நிச்சயமாக மகிழ்ச்சியாக வாழ்வீர்கள்”
நவீன், மேகனா, மீனா : “சரி தாத்தா!”
நம்மை நாம் பிறருடன் ஒப்பிடக் கூடாது. அத்துடன் நம்முடைய சிறப்புக்களை பிறருடைய குறைகளுடன் ஒப்பிட்டு பிறரை காயப்படுத்தவும் கூடாது. மீன்களின் சிறப்பியல்பு நீந்துவது. பறவைகளின் சிறப்பியல்பு பறப்பது. அது போலவே ஒவ்வொரு மனிதனுக்கும் தனித் தனி சிறப்பு திறமைகள் இருக்கின்றன. அவற்றை இனங்கண்டு பெற்றோரின் உதவியுடன் பயிற்சிகள் செய்து தன்னம்பிக்கையுடன் இலட்சியத்தை நோக்கி பயணிக்க வேண்டும். நம் கனவுகளை நிறைவேற்ற எந்தவித முயற்சியும் எடுக்காது பிறருடன் நம்மை ஒப்பிட்டுக் கொண்டிருந்தால் வாழ்க்கையில் வெற்றியை எட்டும் வாய்ப்பை இழந்து விடுவோம் என்பதனை மறக்காதீர்கள்.
பின்வரும் வினாக்களுக்கு விடை தருக.
01) இப்பாடத்தின் மூலம் நீங்கள் கற்றுக் கொண்ட விஷயம் யாது?
…………………………………………………………………………………………………………………………………………………
…………………………………………………………………………………………………………………………………………………
02) மீன்களின் சிறப்பியல்பு யாது?
…………………………………………………………………………………………………………………………………………………
03) பறவைகளின் சிறப்பியல்பு யாது?
…………………………………………………………………………………………………………………………………………………
04) நம்மை நாம் பிறருடன் ஒப்பிடுவதால் ஏற்படும் தீமைகளைக் குறிப்பிடுக.
………………………………………………………………………………………………………………………………………………….
05) இப்பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தீய பண்புகள் இரண்டைக் குறிப்பிடுக.
1. …………………………………………………………………………………………………………………………………….
2. …………………………………………………………………………………………………………………………………….