• முகப்பு
  • நடத்தைகள்
  • 6.2 பிறர் மனதைப் புண்படுத்த வேண்டாம்

6.2 பிறர் மனதைப் புண்படுத்த வேண்டாம்

உள்ளடக்கம்

தாத்தா : “நன்நடத்தைகள் என்ற தலைப்பின் கீழ் வரக்கூடிய பிறர் மனதை புண்படுத்தாதிருத்தல் எனும் பாடத்தை இப்போது கற்கலாம்”

நவீன், மேகனா, மீனா : “சரி தாத்தா”

தாத்தா : “யாராவது தகாத வார்த்தைகளால் நம்மைத் திட்டும் போது நமக்கு கவலையாகிறது. அழ வேண்டும் என்பது போல் ஒரு உணர்வு வருகிறது. குறிப்பிட்ட மனிதர் சொன்ன வார்த்தைகளால் நம்முடைய மனம் புண்பட்டிருப்பதால் இது ஏற்படுகிறது. இவ்வாறே நாம் பிறரை நகைச்சுவை என்ற வகையில் கேலி கிண்டல் செய்து சிரிப்போம். இது பிறர் மனதை வெகுவாக காயப்படுத்தி விடும். நம்மை போன்றே மற்றவர்களும். நம்மைப் போலவே அவர்களுக்கும் வலிக்கும். அதனால் ஒருபோதும் பிறர் மனதை புண்படுத்தக் கூடாது.”

மீனா : “தாத்தா. நீங்கள் சொல்வது சரியே! அவர்களுக்கு எத்தனை கஷ்டமாக இருக்கும்”

தாத்தா : “கண்டிப்பாக மீனா. மிகவும் வருந்துவார்கள். இதனால் பல விளைவுகள் ஏற்படும். தனியாகவோ அல்லது குழுவாகவோ சேர்ந்து பிறர் மனதை புண்படுத்தக் கூடிய பின்வருவற்றை நீங்கள் ஒருபோதும் செய்யக்கூடாது.

  • ஒருவரின் நிறத்தை, ஆடையை, தோற்றத்தை கேலி செய்யக் கூடாது.
  • அவர்களின் உறவுகளைப் பற்றி குறை கூறக்கூடாது.
  • அவர்களின் திறமைகளை அல்லது முயற்சிகளை இழிவாகப் பேசக்கூடாது.
  • ஒருவர் போட்டியில் தோற்றப் பின் அவரது தோல்வியை சுட்டிக்காட்டி சிரிக்க கூடாது.
  • ஒருவருடைய குறைகளை இன்னொருவரிடம் சொல்லக் கூடாது. அதனை வைத்து அவர்களை அவமானப்படுத்தவும் கூடாது.
  • பிறரை அவமரியாதையாக நடத்தக்கூடாது.
  • இன, சாதி, மதம், ஏழை, பணக்காரன் என்கிற வேறுபாடுகளைப் பார்த்து பிறரை விலக்கி வைக்கக் கூடாது.
  • பிறரை மட்டம் தட்டுவது போல் பேச்சுக்கள் அமையக்கூடாது.
  • தகாத வார்த்தைகளால் திட்டக் கூடாது.
  • பிறருடன் சண்டையிடும் பழக்கத்தை விட்டுவிடுங்கள்.
  • அவர்களின் உணர்வுகளை கேலி செய்யாதீர்கள். உதாரணமாக : அவர்கள் அழும் போது சிரிப்பது.
  • பிறரை தரக்குறைவாக நடத்தாதீர்கள்.

நாம் பிறர் மனதைக் காயப்படுத்துவதால் அவர்களுக்கு பின்வரும் விளைவுகள் ஏற்படுகின்றன :

  • மன அழுத்தத்திற்கு ஆளாகுதல்.
  • தனிமையை நாடுதல்.
  • தாழ்வு மனப்பான்மை ஏற்படுதல்.
  • இதனால் சமூகத்திலிருந்து விலகி இருத்தல்.
  • அதிக கோபம் மற்றும் அழுகையை வெளிப்படுத்தல்.
  • வாழ்க்கையை வெறுத்து விபரீதமான முடிவுகளை எடுக்க முனைதல்.

ஒருவரின் தவறை அல்லது குறைபாட்டை அன்பாகவும் நிதானமாகவும் எடுத்துச் சொல்லுங்கள். நிச்சயம் அவர்கள் புரிந்து கொள்வார்கள். நம்மால் பிறரை மகிழ்ச்சியாக வைக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் அவர்கள் மனம் நம் வார்த்தைகளால் நடத்தைகளால் கஷ்டப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருங்கள். இங்கு நானும் சரி நீங்களும் சரி நிறைவான மனிதர்கள் இல்லை என்பதை நினைவி்ல் கொள்ளுங்கள். அன்பு மட்டும் தான் அனைவருக்கும் தேவையானதும் விலைமதிப்பற்றதுமாகும். ஆகவே அன்பைக் கொடுத்து அன்பைப் பெறுவோம்.”

நவீன், மேகனா, மீனா : “நிச்சயமாக தாத்தா! எல்லோரையும் அன்பாலே வழி நடத்துவோம்”

சுருக்கம்

தனியாளாகவோ அல்லது குழுவாகவோ சேரந்து பிறரை கேலி செய்து அவர்களை மனதைப் புண்படுத்துவது தீய செயலாகும். ஒருவர் செய்யக்கூடிய தவறுகளை அன்பாக எடுத்துச் சொல்லித் திருத்த வேண்டும் என்பதை இப்பாடத்தின் மூலம் கற்றிருப்பீர்கள். இப்பாடம் வழிகாட்டியதைப் போல் நாமும் அன்பைக் கொண்டு பிறரை கௌரவிப்போம்.

பயிற்சி

பின்வரும் வினாக்களுக்கு விடை தருக.
01) இப்பாடத்தில் நீங்கள் கற்றுக் கொண்ட விஷயம் யாது?
………………………………………………………………………………………………………………………………………………………

02) பிறரைக் காயப்படுத்தாமல் இருக்க நாம் செய்யக்கூடாத மூன்று விஷயங்களைக் குறிப்பிடுக.
1. ……………………………………………………………………………………………………………………………………………….
2. ……………………………………………………………………………………………………………………………………………….
3. ……………………………………………………………………………………………………………………………………………….

03) பிறர் மனம் புண்படும் போது ஏற்படும் விளைவுகள் இரண்டு தருக.
1. ………………………………………………………………………………………………………………………………………………..
2. ………………………………………………………………………………………………………………………………………………..
04) பிறர் செய்யும் தவறுகளை அல்லது அவர்களிடம் காணப்படும் திருத்திக் கொள்ளக்கூடிய குறைப்பாடுகளை நாம் எவ்வாறு அவர்களிடம் கூற வேண்டும்?
………………………………………………………………………………………………………………………………………………………..

05) உலகிலுள்ள அனைவருக்கும் தேவைப்படுவது யாது?
………………………………………………………………………………………………………………………………………………………..