• முகப்பு
  • சுத்தம்
  • 3.3 நுண்ணுயிர்களிடமிருந்து பாதுகாப்பு

3.3 நுண்ணுயிர்களிடமிருந்து பாதுகாப்பு

உள்ளடக்கம்

கண்ணனும் அவனது தங்கை யாழினியும் அவர்களது பெற்றோர்களுடன் சூப்பர் மார்க்கெட் (Super
Market) ஒன்றுக்கு போனார்கள். இவர்கள் சென்றது, அந்த ஊரின் மிகப்பெரிய கடை… வாயிலில் ஒரு காவலாளி இருந்தார். அவர் இவர்களை கைகளை சுத்தம் செய்து விட்டு உள்ளே போகச் சொன்னார். கைகளை சுத்தம் செய்ய சொன்னதும் யாழினி சுற்றிமுற்றி எங்கே குழாய் இருக்கிறதெனப் பார்த்தாள்.

அம்மா :- ‘‘யாழினி என்ன தேடுறீங்க?’’

யாழினி :- ‘‘அம்மா, அந்த அங்கிள் (Uncle) நம்ம கைகளை சுத்தம் பண்ண சொன்னாங்களே.. ஆனா இங்கே குழாயுமில்லை, சிங்க்கும் இல்லை. பின்னே எப்படி கழுவுறது?’’

அம்மா :- ‘‘நல்ல கேள்வி யாழினி. வாங்க அம்மா எப்படினு சொல்லிக் கொடுக்கிறேன். கண்ணா நீங்களும் வாங்க’’

கடையின் வாயிலில் ஒரு மேசை இருந்தது. அதில் அழுத்துவதற்கு ஏதுவான ஒரு பிளாஸ்ட்டிக்(Plastic) பாட்டில் இருந்தது. கண்ணன் மற்றும் யாழினியின் அம்மா அந்த பாட்டில் இருக்கும் மேசை அருகே சென்றார்.

யாழினி :- ‘‘அம்மா, இது ஹேன்ட் வாஸ் (Hand Wash) பாட்டில் மாதிரி இருக்கே.’’

அம்மா :- ‘‘ஆமாடா. பாக்குறதுக்கு அதே போல தான் இருக்கும். ஆனால் இதன் பெயர் சானிட்டைசர் (Sanitizer). இந்த பாட்டில் மூடியின் மேற்பகுதியை அதிக அழுத்தம் கொடுக்காமல் நமது ஒரு கையால் அழுத்தி மற்றொரு கையின் உள்ளங்கைக்கு சானிட்டைசரை எடுத்துக் கொள்ள வேண்டும். பாருங்கள் அம்மா எவ்வளவு அளவில் எடுத்திருக்கிறேன் என்று.’’

அம்மா :- ‘‘ஆமாம் யாழினி….. இந்த அளவு போதுமானது. அதிகம் எடுக்க கூடாது. ஒருமுறை எடுத்தால் போதுமானது. ஒருமுறைக்கு மேல் மீண்டும் அழுத்தி வீண்விரயம் செய்யக்கூடாது. சரி இருவரும் இப்பொழுது என்னுடைய கைகளை நன்றாக கவனியுங்கள். நான் செய்வதை பின்பற்றி நீங்கள் இருவரும் செய்ய வேண்டும்.

  1. முதலில், சானிட்டைசர் (Sanitizer) பாட்டிலை அழுத்தி செனிட்டைஸரை கையில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  2. இரண்டாவதாக, எடுத்துக் கொண்ட சானிட்டைசர் (Sanitizer)  மூலம் இரு கைகளையும் நன்றாக தேய்க்க வேண்டும்.
  3. பின்னர், விரல்களினால் ஒவ்வொரு விரல் இடுக்குகளையும் நன்றாக தேய்க்க வேண்டும்.
  4. செனிட்டைஸரிலுள்ள நீர் தன்மை கைகளிலிருந்து அகலும் வரை நன்றாக தேய்க்க வேண்டும்.
  5. நாம் இவ்வாறு 10 – 15 வினாடிகளுக்கு இதனை செய்தால் போதுமானது.

அவ்வளவு தான் முடிந்து விட்டது. சரி இப்பொழுது நான் கடையினுள் நுழைகிறேன். நீங்களும் இதேபோல் சானிட்டைசரைப் பயன்படுத்தி விட்டு அப்பாவுடன் கடையினுள் நுழைய வேண்டும்’’

யாழினி :- ‘‘சரி…’’

கண்ணன் :- ‘‘அப்பா, கடைகளில் மட்டுமா இந்த சானிட்டைசர் (Sanitizer) இருக்கும்?’’

அப்பா :- ‘‘இல்லை கண்ணா… மருத்துவமனைகள், நூலகங்கள், பள்ளிகள், தொழிற்சாலைகள், தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் போன்ற மக்கள் அதிகம் வந்து செல்லக்கூடிய பொது இடங்களில் சானிட்டைசர் (Sanitizer)  வைத்திருப்பார்கள். சில இடங்களில் சானிட்டைசருக்குப் பதிலாக சோப்பு வைத்திருப்பார்கள்.’’

கண்ணன் :- ‘‘அப்பா, சானிட்டைசர் (Sanitizer) எதற்காக பண்றாங்க?’’

அப்பா :- ‘‘நம்ம கையில் நிறைய பாக்டீரியாக்கள், வைரஸ்கள் இருக்கும் இல்லையா? அவை நம்மிடமிருந்து இன்னொருவருக்கு பரவக்கூடியவை. இதனால் நோய்கள் ஏற்படலாம். இதனை தடுப்பதற்காகவே பொது இடங்களில் சானிட்டைசர் அல்லது சோப்பைப் பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்ய சொல்லி உலக சுகாதர அமைப்பு வலியுறுத்தியுள்ளது’’

கண்ணன் :- ‘‘சரி அப்பா.. நானும் யாழினியும் சானிட்டைசர் (Sanitizer)   பண்ணிட்டோம். உள்ள போகலாமா?’’

அப்பா :- ‘‘சரி… கண்ணன், யாழினி வீட்டுக்கு போனதும் கைகளை சோப்பு போட்டு கழுவ மறக்க கூடாது’’

கண்ணன் :-  ‘‘அது தான் நாங்க சானிட்டைசர் (Sanitizer) மூலம் சுத்தம்செய்து விட்டோமே அப்பா…. அதுக்கு அப்பறம் எதுக்கு திரும்ப சோப்பைக் கொண்டு கைகளை சுத்தம் செய்யனும்?’’

அப்பா :- ‘‘நல்ல ஒரு கேள்வி…  இதற்கு வீட்டிற்கு போய் பதில் சொல்றேன். இப்போ நம்மள அம்மா தேடுவாங்க. வாங்க போகலாம்’’

கண்ணன், யாழினி :- ‘‘சரி அப்பா’’

சுருக்கம்

கிருமித்தொற்று என்பது விரைவாக பரவக்கூடிய ஒன்று. கிருமித்தொற்றிலிருந்து நம்மையும் நம்மை சார்ந்தவர்களையும் முழு மனித சமூகத்தையும் பாதுகாப்பதற்காகவே உலக சுகாதார அமைப்பு சானிட்டைசர் எனும் சுத்திகரிப்பை பயன்படுத்தி நம் கைகளை சுத்தப்படுத்துமாறும் பொது இடங்களில் சானிட்டைசர் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளது. இப்பாடத்தில் கூறப்பட்டுள்ள படிமுறைகளின்படி சானிட்டைசர் உபயோகித்து கிருமித்தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவோம்.

பயிற்சி

பயிற்சி – 01

பின்வரும் கேள்விகளுக்கு விடை தருக.

01) சானிட்டைசர் (Sanitizer)  என்பதன் தமிழ் சொல் என்ன?

………………………………………………………………………………………………………………………………………….

02) சானிட்டைசரை எத்தனை வினாடிகளுக்கு கைகளில் தேய்க்க வேண்டும்?

………………………………………………………………………………………………………………………………………….

03) சானிட்டைசர் ஏன் பயன்படுத்தப்படுகிறது?

………………………………………………………………………………………………………………………………………….

04) கைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் சானிட்டைசரைத் தவிர்த்து இரண்டு பொருட்களை குறிப்பிடுக.

1 …………………………………………………………          2 ………………………………………………………….

05) சுகாதார மேம்பாட்டிற்காக கைகளை சுத்தம் செய்யும்படி அறிவுறுத்தியுள்ள அமைப்பு எது?

………………………………………………………………………………………………………………………………………….

 

பயிற்சி – 02

வாக்கியங்களை ஒழுங்குபடுத்துக.

01) எடுத்துக்கொள்ள / கைகளில் / வேண்டும் / சானிட்டைசரை

………………………………………………………………………………………………………………………………………….

02) வேண்டும் /  சானிட்டைசர் / நன்றாக / மூலம் / கைகளையும் / தேய்க்க / இரண்டு

………………………………………………………………………………………………………………………………………….

03) நன்றாக / வேண்டும் / விரல் / தேய்க்க / இடுக்குகளையும்

………………………………………………………………………………………………………………………………………….

04) கைகளிலிருந்து /  சானிட்டைசரில் / நீர் / உள்ள / வேண்டும் / தன்மை / அகலும் / தேய்க்க / வரை / நன்றாக

………………………………………………………………………………………………………………………………………….

05) கைகளை /  வினாடிகளுக்கு / வேண்டும் / பதினைந்து / தேய்க்க / இவ்வாறு

………………………………………………………………………………………………………………………………………….

 

பயிற்சி – 03

பின்வரும் ஆங்கில சொற்களுக்கான சரியான தமிழ் பொருளை கண்டுபிடித்து பொருத்துக.

  1. Hand Wash               அங்காடி
  2. Sanitizer                   மாமா
  3. Super Market            கை கழுவதல்
  4. Uncle                        சுத்திகரிப்பு