• முகப்பு
  • தலைமைத்துவப் பண்புகள்
  • 1.5 பிறர் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம்

1.5 பிறர் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம்

உள்ளடக்கம்

அப்பா : “ஒரு தலைவனாக பிறர் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது மிக முக்கியம். உணர்வுகள் மெல்லியவை. உடலில் ஏற்பட்ட காயம் காலப்போக்கில் மறைந்து விடும். ஆனால், வார்த்தைகளால் மனதில் ஏற்பட்ட காயம் மறைவதில்லை. அதனால் சகமனிதனாக கூட யார் மனதையும் புண்படுத்தக் கூடாது.’’

கண்ணன் : “பிறர் மனம் புண்படும்படி பேச வேண்டாம்“ என்று எங்கள் பள்ளியிலும் கற்றுத்
தந்திருக்கிறார்கள்.

அப்பா : “ஒரு அணியின் தலைவன்,

  • அணியிலுள்ள யாரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது.
  • நிறைகளைத் தட்டிக் கொடுத்து குறைகளை பக்குவமாக எடுத்து சொல்ல வேண்டும்.
  • குறைகளை கேலி பேசி சிரிக்கக் கூடாது.
  • சகஜமாகப் பேசி பயத்தை போக்க வேண்டும்.
  • அணியிலுள்ள அனைவரையும் ஊக்குவிக்க வேண்டும்.
  • எல்லோருடனும் சரிசமமாக பழக வேண்டும். வேறுபாடு காட்டக் கூடாது.
  • எந்நேரமும் அணியை உற்சாகத்துடன் வைத்திருக்க வேண்டும்.
  • தோல்விக்கு நீ தான் காரணம் என்று கோபப்படாமல் எங்கே தவறியது என்பதை ஆராய்ந்து கற்றுக் கொடுக்க வேண்டும்.
  • அணியில் கலந்து ஆலோசித்து தீர்மானங்கள் மேற்கொள்ள வேண்டும்.
  • அணியிலுள்ள அனைவரது கருத்துக்களையும் செவி தாழ்த்தி கேட்க வேண்டும்.
  • ஒவ்வொருவரின் திறமைகளையும் இனங்கண்டு ஊக்குவிக்க வேண்டும்.

நமது நாட்டின் கிரிக்கெட் அணித் தலைவராக இருந்த எம்.எஸ்.தோனியை இவ்வாறான பண்புகளைக் கொண்ட தலைவராகக் காணலாம். அதனால் தான் அவரை பெருமைப்படுத்தி அவருடைய பெயரில் ஒரு திரைப்படம் கூட வெளியிடப்பட்டிருக்கிறது. திறமைகள் மட்டுமே தலைவனாக்குவதில்லை. குணங்களும் தான் என்பதை இவரிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்.

ஒரு நாட்டின் தலைவர்,

  • மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
  • வாக்கு தவறுவதால் அவர்கள் உங்களுக்கு அளித்த வாக்குகளை எண்ணி வருத்தப்படுவார்கள்.
  • பிரதமர், அமைச்சரவை, எதிர்க்கட்சியின் கருத்துக்களை கூர்மையாக நோக்க வேண்டும்.
  • நல்ல கருத்துக்களை வரவேற்க வேண்டும்.
  • எதிர்க்கட்சி அல்லது பொதுமக்கள் கூறுகின்ற குற்றச்சாட்டுக்களை ஆராய்ந்து தீர்வு காண வேண்டும்.
  • இன, மத, சாதி என்கிற வேறுபாடுகள் இன்றி யாவருக்கும் தலைவர் என்கிற நன்நோக்குடன் செயல்பட வேண்டும்.
  • எதிர்க்கட்சியை தாழ்த்தி பேசுவதில் பயனில்லை என்பதை உணர்ந்து தங்களை வாக்குகள் மூலம் தேர்ந்தெடுத்த மக்களுக்கு சேவையாற்றுவதில் உறுதியாக இருக்க வேண்டும்.
  • தங்களை நாடி வரும் மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகள் அளிக்க கூடாது.
  • பிறரை கேலி பேசி நேரத்தை வீணாக்காது செயலில் சிறந்த தலைவன் என்பதை நிருபிக்க வேண்டும்.

கண்ணன் : “பிறர் உணர்வுகளை மதிப்பது தலைமைத்துவத்திற்கு எத்தனை அவசியம் என்பதை உணர்ந்து கொண்டேன் அப்பா. நன்றி!’’

சுருக்கம்

பிறர் உணர்வுகளுக்கு மதிப்பளித்தல் என்பது தலைமைத்துவப் பண்புகளில் ஒன்றாகும். இந்த பண்பை உடையவர்கள் காலம் கடந்தாலும் மதிப்பளிக்கப்படுவார்கள். குறிப்பிட்ட இந்த பண்பு இல்லாமல் இருப்பவர்கள் நிச்சயமாக சிறந்த தலைவனாக இருக்க தகுதியற்றவர்களே என்பதை இப்பாடத்தின மூலம் விளங்கிக் கொண்டிருப்பீர்கள். ஆகவே, பிறர் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நாமும் தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக் கொள்வோம்.

பயிற்சி

பயிற்சி

பின்வரும் கேள்விகளுக்கு விடை எழுதுக.

1) இப்பாடத்தில் கற்றுக் கொண்ட தலைமைத்துவப் பண்பு யாது?
……………………………………………………………………………………………………………………………….

2) ஒரு விளையாட்டு அணியின் தலைவர் சகபோட்டியாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு மூன்று உதாரணங்கள் தருக?
I. ……………………………………………………………………………………………………………………………..
II. …………………………………………………………………………………………………………………………….
III. ……………………………………………………………………………………………………………………………

3) ஒரு நாட்டின் தலைவர் பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக் கூடிய ஒரு முறையை எழுதுக.
………………………………………………………………………………………………………………………………….

4) இப்பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சிறந்த தலைவர்கள் இருவரின் பெயரைக் குறிப்பிடுக.
1. ……………………………………………………….. 2. …………………………………………………………

5) இப்பாடத்தில் குறிப்பிடப்படாத உங்களுக்குத் தெரிந்த சிறந்த தலைவர் ஒருவரின் பெயரைக் குறிப்பிடுக.
……………………………………………………………………………………………………………………………