• முகப்பு
  • தலைமைத்துவப் பண்புகள்
  • 1.4 கோபத்தைக் கட்டுப்படுத்துவோம்

1.4 கோபத்தைக் கட்டுப்படுத்துவோம்

உள்ளடக்கம்

அப்பா : “தலைமைத்துவ பண்புகளில் கோபத்தைக் கட்டுப்படுத்துதலும் ஒன்றாகும். மல்யுத்தம் செய்து வென்றவன் வீரனல்ல. கோபத்தின் போது தன்னை அடக்கிக் கொள்பவனே உண்மையான வீரன் என்கிற ஒரு கருத்து இருக்கிறது. அந்த கருத்தை ஆராய்கையில் தலைமைத்துவத்தில் கோபத்தை கட்டுப்படுத்துதலின் முக்கியத்துவத்தை உணர முடியும்.’’

கண்ணன் : “கோபம் வரும் போது எப்படி அதனை கட்டுப்படுத்திக் கொள்வது என்பதற்கான வழிமுறைகளையும் கற்றுத் தாருங்கள் அப்பா’’

அப்பா : “கண்டிப்பாக கண்ணா! கோபம் எல்லோருக்கும் ஏற்படக்கூடிய உணர்வு. இருந்தாலும் அதன் எல்லையைக் கடக்கும் போது நமது அன்பானவர்கள் பாதிப்படைவார்கள். கோபத்தில் நமது நண்பர்களையோ, உறவினர்களையோ திட்டி விட்டால் அவர்களது மனம் காயப்பட்டு விடும். இது தலைவனுக்குரிய பண்பல்ல என்று முந்தைய பாடத்தில் கற்றுக் கொண்டீர்கள்’’

கண்ணன் : “ஆமாம் அப்பா’’

அப்பா : “கோபம் வரும் போது நாம் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பின்வருமாறு,

  • உடனடியாக அந்த இடத்திலிருந்து வெளியேறுதல் :- இதன் மூலம் அந்த இடத்தில் இருப்பவர்களின் மனம்நோகும்படி பேசுவதைத் தவிர்க்க முடியும்.
  • தண்ணீர் அருந்துதல் :- கோபம் கட்டுப்பட இது உதவும்.
  • எண்களை மனதில் கூறுதல் :- ஒன்றிலிருந்து பத்துவரை எண்களை மெதுவாக மனதினுள் கூறுவதால் கோபம் தணியலாம்.
  • நம் கோபங்களை ஒரு காகிதத்தில் எழுதி காகிதத்தை கிழித்து வீசுதல் :- இவ்வாறு செய்வதன் மூலம் தூக்கிப்போட்ட காகிதத்தை போல் நம் மனதிலுள்ள கோபமும் தணிந்து விடும்.
  • எதிர்தரப்பின் வாதத்தை முழுமையாகக் கேட்டல் :- பிறர் பேசுவதை முழுமையாக கேட்க வேண்டும். அவர்கள் பேசும் போது குறுக்கிட்டு அவர்களின் கோபத்தை நாம் அதிகரிக்க கூடாது. ஏற்கனவே கோபமாக இருப்பவர்களை நாம் இன்னும் கோபப்படுத்தும் படி பேசவும் கூடாது.
  • கோபத்தின் போது பொருட்களை எறிவதையோ உடைப்பதையோ தவிர்க்க வேண்டும் :- இது மிக தீய பழக்கம். பொருட்களை உடைப்பதும் எறிவதும் உங்கள் மீதான மதிப்பை இழக்கச் செய்யும்.

மேற்குறிப்பிட்டவற்றை பின்பற்றி நடக்கும் போது கோபத்தின் போது உறவுகள் அல்லது குழுவிற்குள் விழும் விரிசலை இல்லாமல் ஆக்கலாம். கோபத்தைக் கட்டுப்படுத்த மேற்கூறப்பட்ட ஏதாவது ஒரு வழியினை பின்பற்றுவதன் மூலம் தலைவர் என்பவர் சிறந்த தலைவர் என்று தன் குழுவினரால் அல்லது சமூகத்தினரால் அங்கீகரிக்கப்படுவார்’’

கண்ணன் : “நான் இனி கோபப்படும் பழக்கத்தைக் குறைத்துக் கொண்டு தலைமைத்துவத்துற்கான இந்த பண்பையும் வளர்த்துக் கொள்வேன்’’

சுருக்கம்

கோபத்தைக் கட்டுப்படுத்தல் என்பது தலைமைத்துவப் பண்புகளில் ஒன்றாகும். கோபத்தின் மூலம் நமது அன்பு உறவுகளான பெற்றோர்கள், சகோதரர்கள், குழுவினர் மற்றும் நண்பர்களின் மனதை வார்த்தைகளால் காயப்படுத்தி விடுவோம். இதன் மூலம் உறவுகளுக்குள் பிளவு ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இதனைத் தவிர்க்க நிச்சயமாக நாம் இப்பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளைக் கையாள்வதன் மூலம் தலைமைத்துவப் பண்பை வளர்த்து உறவுகளுக்குள் குழுவினற்குள் சுமூகமான உறவைப் பேண முடிவதோடு எடுத்துக்காட்டாகவும் திகழலாம்.

பயிற்சி

பயிற்சி

பின்வரும் வினாக்களுக்கு விடை தருக.

1) நாம் கோபப்படும் போது பாதிக்ககூடிய நபர்கள் இருவரைப் பெயரிடுக.
1. ……………………………………………………. 2. ………………………………………………………..

2) கோபத்தினால் ஏற்படக்கூடிய விளைவுகள் இரண்டைக் குறிப்பிடுக.
I. ……………………………………………………………………………………………………………………………
II. ……………………………………………………………………………………………………………………………

3) கோபத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய வழிமுறைகள் மூன்றைக் குறிப்பிடுக.
I. ……………………………………………………………………………………………………………………………
II. ……………………………………………………………………………………………………………………………
III. ……………………………………………………………………………………………………………………………

4) கோபத்தின் போது தன்னை அடக்கிக் கொள்பவர் பற்றி இப்பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்தைக் குறிப்பிடுக.
………………………………………………………………………………………………………………………………………….
………………………………………………………………………………………………………………………………………….