• முகப்பு
  • பசுமைச் சுற்றுச்சூழல்
  • 8.3 பிளாஸ்டிக் – PLASTIC (நெகிழி) பயன்பாட்டைத் தவிர்ப்போம்

8.3 பிளாஸ்டிக் – PLASTIC (நெகிழி) பயன்பாட்டைத் தவிர்ப்போம்

உள்ளடக்கம்

பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்ப்போம் என்கிற அடுத்த பாடத்தை ராகுல் படிக்கத் தொடங்கினான்.

ராகுல் : “பிளாஸ்டிக் பொருட்கள் இயற்கைக்கு கேடு விளைவிப்பவை. சுற்றுச்சூழலை மாசுபடுத்துபவை. மனிதனுக்கு புற்று நோய் உள்ளிட்ட பல கொடிய நோய்களை ஏற்படுத்தும். பிளாஸ்டிக் மண்ணோடு மக்காத பொருளாகும். சிறுவர்கள் உபயோகிக்கும் விளையாட்டு வாகனங்கள், பொம்மைகள் முதல் வாகன உதிரிப்பாகங்கள் வரை பிளாஸ்டிக் இல்லாத பொருளே இல்லை எனலாம். விலை குறைவு, எடை குறைவு போன்ற காரணங்களால் மக்கள் இதனை உபயோகின்றனர்.

செயற்கை மூலக்கூறுகளால் உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக் நம்முடைய சுற்றுச்சூழலை அழிக்கக்கூடிய பொருளாகும். பிளாஸ்டிக் பொருட்கள் உடைந்து விட்டால் நாம் கவனமின்றி தூக்கிப் போடுகிறோம். இதனால் ஏற்படும் விளைவுகள் :

  • கழிவு நீர் அடைப்பு; இதனால் ஈக்கள் பெருகுதல்
  • மண்வளம் பாதிப்படைதல்
  • உடல் ஆரோக்கியம் பாதிப்படைதல் – பிளாஸ்டிக் உறைகளால் அடைக்கப்பட்டு பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களால் உடலுக்கு தீங்கு விளைகின்றன.
  • பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் மற்றும் குளிர்பான பாட்டில்கள் சாக்கடைகள் போன்ற இடங்களில் அடைபட்டு பல இன்னல்களை ஏற்படுத்தும்.
  • கொடிய நோய்கள் பரவுதல் – பிளாஸ்டிக் பைகளை தூக்கி எறியாதீர்கள். இதனால் உங்களுக்கு அது நோய்களை உண்டாக்கவும், அவற்றில் மழைநீர் தேங்குவதன் மூலம் டெங்கு கொசுக்கள் பெருகவும், நீர் ஆதாரப் பிரச்சினைகளை உருவாக்கவும் காரணமாகலாம்.
  • விலங்குகள் உட்கொள்ளும் அபாயம் – வீணாகும் உணவு, காய்கறி கழிவுகளை பிளாஸ்டிக் பைகளில் அடைத்து தூக்கியெறியாதீர்கள்! இவற்றினை விலங்குகள் உண்டால் குடலடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கலாம். உயிர்வதை செய்வதும் சட்டப்படி குற்றமாகும்.
  • நிலத்தின் மேலிருக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் மழைநீர் ஊடுருவி நிலத்தடியைச் சென்றடைய தடையாக உள்ளது.

பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கும் முறைகள் :

  • பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப்பைகளை உபயோகித்தல்
  • குப்பையை மக்கும் மற்றும் மக்காத குப்பையாகப் பிரித்து மேலாண்மை செய்தல்
  • மூட்டைகள் அல்லது பொதிகளை கட்டுவதற்கு பிளாஸ்டிக்கை தவிர்த்தல்
  • உணவுப்பொருட்களை உட்கொள்ள தரமற்ற பிளாஸ்டிக்கை உபயோகப்படுத்தாதிருத்தல்
  • பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை உண்பதை தவிர்த்தல்.
  • பிளாஸ்டிக் பொருட்களை கண்ட இடத்தில் எறிதல் கூடாது.

பிளாஸ்டிக் மீள்சுழற்சி, மீள் பயன்பாடு :

பிளாஸ்டிக் பொருட்களை வேகமாக உற்பத்தி செய்ய முடிகிறது. ஆனால் மட்குவதற்கு எடுக்கும் காலம் பல நூறு ஆண்டுகளாகும். கடலில் மிதந்துக் கொண்டிருக்கும் கழிவுகளில் 90% பிளாஸ்டிக் சார்ந்த பொருட்களே. இப்போது உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்களில் வெறும் 7% மட்டுமே மீள்சுழற்சி செய்யப்படுகின்றன. மீதி 93% பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு தீமைகளைத் தான் தருகின்றன. ஆகவே, அனைத்து வணிகர்களும் பொது மக்களும் தனக்கென பிளாஸ்டிக் தவிர்ப்பு முறைகளைக் கையாண்டு பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து அதற்கு மாற்றான பொருட்களைப் பயன்படுத்த தொடங்க வேண்டும்.

பிளாஸ்டிக்கை தவிர்க்கும் போது ஏற்படும் நன்மைகள் :

  • இதனை தவிர்ப்பதன் மூலம் விவசாய நிலம், மணல், நீர்நிலைகள், விலங்கினங்கள் நன்மை அடையும். எவ்வாறெனில்,
  • தட்பவெப்பநிலை சமன்படுதல்
  • மண்வளம் பேணப்படுதல்
  • மழை நீர் நிலத்தடியைத் தடையின்றி சென்று சேர்தல்
  • நாட்டின் தூய்மையும் பசுமையும் பேணப்படல்
  • நோய்களிலிருந்து பாதுகாப்பு பெறல்
  • உடல் நலம் பேணப்படல்
  • விலங்குகள் பிளாஸ்டிக் உண்ணுவதற்கான வாய்ப்பு இல்லாது போகுதல்

ஆகவே நாட்டின் குடிமகனாக நாட்டிற்காகவும், நாட்டு மக்களுக்காகவும், எதிர்கால சந்ததியினர்களுக்காகவும் மற்றும் சுற்றுச்சூழலின் நலன் கருதியும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதைத் தவிர்க்க தொடங்க வேண்டும். மாற்றத்தை நாமாக தொடங்காத வரையில் எதுவும் மாறப்போவதில்லை! பிளாஸ்டிக் இல்லாத நாட்டை உருவாக்குவோம்.”

சுருக்கம்

பிளாஸ்டிக் இன்று ஒவ்வொரு வீட்டிலும் பயன்படுத்தக்கூடிய பொருளாக திகழ்கிறது. மருந்துக்கடை, துணிக்கடை, காய்கறி கடை, மின்னணு சாதனங்கள், வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் உணவுப்பொருட்கள் போன்ற பல்வேறுபட்ட முறைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாக உள்ளது. பிளாஸ்டிக் மலிவானதாக கிடைக்கப்பெற்றாலும் அதன் தீமைகள் மிகவும் தீவிரமானவை, ஆகவே இப்பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முறைகளைக் கையாண்டு பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்து பிளாஸ்டிக் இல்லா தேசத்தை உருவாக்குவோம்!

பயிற்சி

பின்வரும் வினாக்களுக்கு விடை தருக.
01) பிளாஸ்டிக் பொருட்களுக்கு மக்களிடம் வரவேற்பு இருப்பதற்கான இரண்டு காரணிகள் யாவை?
1. ………………………………………………………………. 2…………………………………………………………………….
02) வீட்டில் காணப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் இரண்டினைக் குறிப்பிடுக.
1. ………………………………………………………………. 2…………………………………………………………………….

03) பிளாஸ்டிக் பொருட்கள் மட்குவதற்கு எடுக்கும் காலம் யாது?
…………………………………………………………………………………………………………………………………………………………….

04) பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் மூன்றை எழுதுக.
1. ………………………………………………………………………………………………………………………………………………………
2. ………………………………………………………………………………………………………………………………………………………
3. ………………………………………………………………………………………………………………………………………………………

05) பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்ப்பதற்கான இரண்டு வழிமுறைகளைக் குறிப்பிடுக.
1. …………………………………………………………………………………………………………………………………………………………….
…………………………………………………………………………………………………………………………………………………………………..

2. …………………………………………………………………………………………………………………………………………………………….
…………………………………………………………………………………………………………………………………………………………………..